"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்-நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கல்
வேலூர் :
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் 484 பயனாளிகளுக்கு 6 கோடியே 17 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இன்று (07.06.2021 ) வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒருபுறம் கொரோனா தடுப்பு பணி, ஒருபுறம் கொரோனா நிவாரண நிதி, மக்கள் நலத்திட்டங்கள் என ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும் கொரோனா நோயாளிகளை அவர்கள் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்று மனிதாபிமானத்துடன் நலம் விசாரித்தவர் மாண்புமிகு முதல்வர் அவர்கள் என மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் பெருமிதம்.
மோர்தானா அணை, வலதுபுற கால்வாய், இடதுபுற கால்வாய்கள் ரூபாய் 48 இலட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வரும் ஜீன் 18 ஆம் தேதி திறக்கப்படும் என மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் தகவல்.
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். அந்த வகையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கி அதற்கு தனி அலுவலர்களை நியமித்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.
வேலூர் மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் 4 ஆயிரத்து 225 மனுக்கள், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 1172 மனுக்கள், குடிசை மாற்று வாரியம் சார்பில் 482 மனுக்கள் பிற துறைகள் சார்பில் 2159 மனுக்கள் பெறப்பட்ட 8038 மனுக்களில் 484 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று 6 கோடியே 17 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரத்து 554 மனுக்கள் தொடர் நடவடிக்கையில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு காலத்தில் படுக்கை வசதிகள் ஆக்ஸிஜன் வசதிகள் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வரப்பெற்ற கோரிக்கைகள் மீது உடனுக்குடன் எடுத்த நடவடிக்கையால் கொரோனா நோய் தொற்று நமது மாவட்டத்தில் ஓரளவு குறைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க தென்பண்ணை ஆற்றிலிருந்து படேதால்வாய் ஏரியிலிருந்து பர்கூர் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வரும் உபரி நீரை பாலாற்றில் கொண்டு வரும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஏற்பட்டால் பாலாற்றில் 3 மாதம் தொடர்ந்து தண்ணீர் ஓடும் நிலை ஏற்படும். மேலும், வேலூர் புதிய பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்கப்படும். கீரின் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலையின் ஓரம் உள்ள மின் கம்பங்களை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளை அவர்கள் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்று மனிதாபிமானத்துடன் விசாரித்தவர் மாண்புமிகு முதல்வர் அவர்கள். வேலூர் மாவட்டத்தில் 4 இலட்சத்து 29 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. 2 வது தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அடுத்த வாரம் வழங்கப்படும். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளான ஆவின் பால் ரூ.3 விலை குறைப்பு, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்டம் வழங்குதல் போன்ற பணிகளையும் இந்தியாவிற்கே முன்னோடியாக கொரோனா தடுப்பு காலத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். பொதுமக்கள் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, தடுப்பூசி செலுத்தி கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், மாநகராட்சி ஆணையர் திரு.ந.சங்கரன், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் திரு.சண்முகம், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.மணிவண்ணன், உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான், இ.கா.ப மற்றும் துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.கோ.புண்ணியகோட்டி அவர்கள் நன்றி கூறினார்.
******
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.
No comments
Thank you for your comments