திருக்கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணியாற்றுவோருக்கு ரூ.4000, 15வகை மளிகை பொருட்கள்...
சென்னை:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.6.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகையாக 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாததால் திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், திருக்கோயில் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். திருக்கோயில் ஊழியர்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து, திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள், இதர பணியாளர்களுக்கு ரூ.4,000/- உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஆணையிட்டார்கள்.
அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாதச் சம்பளம் இல்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்குரூ.4,000/- உதவித் தொகையும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, திருமுல்லைவாயில்- அருள்மிகு பிடாரி எட்டியம்மன் திருக்கோயில், அருள்மிகு பிடாரி பொன்னியம்மன் திருக்கோயில், பூங்காநகர்- கந்தகோட்டம் அருள்மிகு முத்துக் குமாரசுவாமி திருக்கோயில், அத்திப்பட்டு-அருள்மிகு கிருஷ்ணசாமி பெருமாள் திருக்கோயில், சென்னை -அருள்மிகு சென்னமல்லீஸ்வரர்
மற்றும் சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயில், பைராகிமடம்-அருள்மிகு பைராகிமடம் திருவேங்கட-முடையார் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் பணியாற்றும் 12 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
******
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments
Thank you for your comments