பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த திருடனை வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிய காவல்துறையினர்
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையான சூழால் அருகே கிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஹரி.
கூலி தொழிலாளியான இவரது வீட்டில் 27-04-2021 அன்று 8:40 மணி அளவில் மர்மநபர் ஒருவர் மாடிபடிவழியாக ஏறி செல்வதை வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து மர்மநபர் மாடியிலிருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தப்பி ஓடிய அந்த மர்மநபரை பிடித்து, கொல்லங்கோடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் கொல்லங்கோடு பிலாவிளை பகுதியை சேர்ந்த 25 வயதான ரோய் என்பதும் தெரியவந்தது
இதையடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலையில் இது குறித்து புகாரளிக்க சென்ற ஹரி காவல் நிலையத்தில் பொதுமக்களால் பிடித்துகொடுத்த வாலிபரை கொல்லங்கோடு காவலர்துறையினர் வீட்டிற்கு அனுப்பியதையறிந்து அதிர்ச்சியுற்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரி என்பவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு புகாரளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த கொல்லங்கோடு காவல்துறையினர் மேல்நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதியில் தற்போது அதிகளவில் வாகன திருட்டு, கொள்ளை நடைபெற்றுவரும் நிலையில் கொல்லங்கோடு காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
No comments
Thank you for your comments