Breaking News

இலவச சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்...

வேலூர் - 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க  வேலூர் விஐடி  வளாகத்தில் 200  படுக்கை வசதியுடன் கூடிய  கோவிட் தொற்றுக்கான இலவச சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தினை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி  ஆகியோர் இன்று (26.05.2021)  திறந்து வைத்தனர்.  



இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு)  ஜெ.பார்த்தீபன் அவர்கள் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.கார்த்திகேயன், அமலுவிஜயன்,  விஐடி துணைத்தலைவர்  ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.சுசிகண்ணம்மா அனைவரையும் வரவேற்றார்.

மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் மிக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முதல் அலையில் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வந்த சித்தா கோவிட் சிகிச்சை மையத்தில் 2700 பேர் சிகிச்சை பெற்று பலன் அடைந்தனர். இரண்டாவது அலையில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இன்று வரை 1000 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளனர்.



இரண்டாவது அலை துவக்கத்தில் இதே விஐடி வளாகத்தில் செயல்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 352 பேரும், குடியாத்தம் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 1254 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

நாள்தோறும் நோயின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் சித்த மருத்துவத்தை நாடும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆகவே அதை கருத்தில் கொண்டு மீண்டும் விஐடி வளாகத்தில் பிரத்யேகமான இயற்கை உணவுகளோடு சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்படவுள்ளது .

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ஏழை எளிய  மக்களும் எளிய முறையிலே பயன்பெறும் வகையில், வேலூரில் தந்தை பெரியார் பொறியில் கல்லூரியில் செயல்பட்டு கொண்டிருக்கும் சித்த மருத்துவ கோவிட் சிகிச்சை மையத்தை தொடர்ந்து, வேலூர் விஐடி வளாகத்தில் நலம் காக்கும் சித்தமருத்துவ கோவிட் சிறப்பு சிகிச்சை மையம் இன்று (26.5.2021) துவங்கப்படுகிறது.


இம்மையத்தின் சிறப்பு அம்சம் தொற்று பாதிப்புக்குள்ளான  நோயாளிகள், குறிகுணங்கள் இல்லாத அல்லது லேசான மற்றும்  மிதமான குறிகுணங்கள் உடைய நோய்தொற்று உறுதிப்படுத்திய பின் உடனடியாக வரும் பட்சத்தில் அதாவது தும்மல் சளி காய்ச்சல் இருமல் ஆகிய குறிகுணங்கள் ஆரம்பித்த உடனேயே இங்கு வரும் பொழுது அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் பேணும் வகையில் இங்கு சித்தமருத்துவ சிறப்பு மருந்துகளைக் கொண்டும் மற்றும் நீராவி பிடித்தல், மன அழுத்தத்தை குறைக்க சித்த மருத்துவத்தின் யோகாசன பயிற்சி முறைகள், சூரியநமஸ்காரம் மற்றும் பெரும் கவலையை மறக்க ஊஞ்சல் ஆட்டம்,  பொழுதுபோக்கிற்காகவும், அறிவு விருத்திக்காகவும், நோய் அணுகாமல் எவ்விதம் நம்மை பாதுகாத்துக் கொள்வது, சத்துள்ள சரிவிகித உணவு வகைகளை எவ்விதம் எடுத்துக்கொள்வது ,மன அமைதி பெறும் பொருட்டு ஆன்றோர்களின் அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களுடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் :

* மேல் சுவாசப்பாதை நலத்தை பேணும் பொருட்டு மஞ்சள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தல், 

* நொச்சி,  மஞ்சள், துளசி, ஓமவல்லி ஆகிய மூலிகை கலந்த நீரைக்கொண்டு ஆவி பிடித்தல்.

* சித்த மருத்துவத்தின் தனித்துவ கோட்பாடான உணவே மருந்து எனும் அடிப்படையில் நோய் எதிர்ப்புசக்தி திறனை அதிகரிக்கும் பிரத்தியேகமான அதிக புரதச்சத்தும், இரும்புச்சத்தும், வைட்டமின் ஏ, பி, சி, இ ஆகிய சத்துக்களை கொண்ட உணவு வகைகளையும்,

* வைட்டமின் டி அதிகரிக்கும் பொருட்டு சூரிய குளியல் , 

* நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்க திருமூலரின் சுவாசப் பயிற்சி முறைகளை பயிற்றுவித்தும், 

* ஆக்சிசன் அளவு குறையாமல் இருக்க தனித்துவ மருந்துகள் கலந்த கிராம்பு குடிநீர், 

* சுவாசப் பாதையை தொற்று இல்லாமல் காத்து சுவாசக்கோளாறுகளை தடுக்கும் தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, பதினா, கொத்தமல்லி இலை, ஆகிய மூலிகைகளைக் கொண்டு மூலிகை சூப் வகைகள் 

* மூலிகை தேநீர் ஆகியவை இம்மையத்தில்லேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.    

இங்கு பணிபுரியும்  மருத்துவர்கள் மக்கள் சேவையை மனதில் நிறுத்தி சிகிச்சைக்காக இங்கு வரும் நபர்களுடன் உற்சாகமாக உரையாடி அவர்களுக்கு நோய் பற்றிய பயம் நீங்கவும்,  இயல்பாகவும்,மன அமைதியுடன் இருப்பதற்கு தேவையான கலந்துரையாடல், நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விரைவில் குணமடைய ஏதுவாக இருக்கும்.

எட்டு வடிவ நடைபாதையில் நடைப்பயிற்சியும் விளையாட்டு அரங்கத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டு அவர்களை முழு நேரமும் தகுந்த உணவும், உடற்பயிற்சியும் மனோபலத்தை ஏற்படுத்தக் கூடிய உரையாடல்களை  கொண்டும், பரிபூரண குணமடைந்து செல்லும பொழுது உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறைகளையும் அதற்கென பிரத்யேகமாக உள்ள மருத்துவ பெட்டகத்தையும் கொடுத்து,  நலம் காக்கும் சிறப்பு சித்தமருத்துவ மையம்  200 படுக்கைகளுடன் முதற்கட்டமாக இயங்க உள்ளது.

மேலும் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் மற்றும் இயற்கை வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடித்து நோய் அணுகா விதிகளை அறிந்துகொண்டு வாழ, இம்மையத்தில் அவர்களுக்கு உடல் நலம் காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளைக் கொண்டும்,  உற்சாகமாகவும் ஆர்வத்துடனும் பணிபுரியும் மருத்துவர்களைக் கொண்டும் சித்தமருத்துவ சிறப்பு கோவிட் சிகிச்சை மையம் இயங்கவுள்ளது.  இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்களை உடைய தனித்த சித்தமருத்துவ கொரானா   சிகிச்சையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.    

தொடர்ந்து  விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் 18 முதல் 44 வயதிற்குட்பட்ட 1200  விஐடி பல்கலைக்கழக  முன்னுரிமை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி    அவர்கள் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் செல்வி.ஆர்.ஐஸ்வர்யா  மாநகராட்சி ஆணையர் ந.சங்கரன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.மணிவண்ணன், நகர்நல அலுவலர் மரு.சித்ரசேனா சித்த வைத்தியர் சக்தி. சுப்பிரமணியம், விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட சித்த வைத்திய ஒருங்கிணைப்பாளர் மரு.தில்லைவாணன்  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.



No comments

Thank you for your comments