ஏமாற்றத்தில் திருநங்கைகள்...!
விழுப்புரம்:
விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் இந்தாண்டு நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் வழக்கம்போல் கூத்தாண்டவர் கோயிலில் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் வருகை தருவர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு அழகி போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை திருவிழா காப்புக் கட்டுதலுடன் சித்திரை 1 ஆம் தேதியான நாளை தொடங்கவிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு நாள் பாதிப்பு தமிழகத்தில் 6 ஆயிரத்தை தாண்டியது. அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கோயில்களில் சித்திரை திருவிழா உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையினர் கூத்தாண்டவர் கோயிலில் இந்தாண்டு நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். எனினும் வழக்கம் போல் நித்திய பூஜைகள் நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சித்திரை விழா ரத்து தொடர்பான விவரங்களை அதிகாரிகள் கோயிலுக்கு வெளியே எழுதி வைத்துள்ளனர். இதனால் திருநங்கைகள் ஏமாற்றமடைந்தனர்.

No comments
Thank you for your comments