Breaking News

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அரசு அனுமதி

சென்னை :

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசே ஆக்சிஜன் உற்பத்தி பிரிவை ஏற்று நடத்தினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பியது.



அனைத்து கட்சி கூட்டம்

 தமிழ்நாடு அரசால் மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 9.15 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  கனிமொழி, எம்.பி., மற்றும் ஆர்.எஸ். பாரதி, எம்.பி.,  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எல். முருகன், கே.டி. ராகவன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே. தங்கபாலு, டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே. பாலகிருஷ்ணன், ஏ. சௌந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர். முத்தரசன், எம். வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ. கணேஷ் குமார், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எஸ். அன்புராஜ் மற்றும் வி.டி. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆற்றிய உரையில், 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1997 முதல் 2018 வரை இயங்கி வந்த வேதாந்தா தாமிர உருக்காலை நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.

    இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்து, தற்போது மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை கீழ்க்காணும் வேண்டுகோளுடன் தாக்கல் செய்துள்ளது. ""தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துக்களை பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும்; கொரோனா தாக்கத்தினால், தேவைப்படும் பிராணவாயுவை தங்களது இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் கூடத்திலிருந்து (Oxygen Plant) நாளொன்றுக்கு வாயு நிலையிலுள்ள பிராணவாயுவை 1050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் கோவிட்-19 சிகிச்சைக்கும் தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்"" என கேட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் தங்களது நிறுவனத்திலுள்ள இரண்டு பிராணவாயு உற்பத்தி செய்யும் கூடத்தில், உபகரணங்களின் நிலைமைக்கேற்ப 2 அல்லது 4 வாரங்களுக்குள்ளாகவே வாயு நிலையிலுள்ள பிராணவாயு உற்பத்தி செய்து தர முடியும் என்று மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால மனு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், 22.4.2021 மற்றும் 23.4.2021 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இன்று அல்லது நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கின்றது, தமிழ்நாடு அரசின் நிலைபாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும். இது குறித்து முதலில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்  சில விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து, இங்கு பங்கேற்றுள்ள அனைத்து கட்சிகளினுடைய நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை சுருக்கமாக தெளிவுபடுத்தலாம். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை  இருக்கின்ற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம். மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை, அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கின்றோம். இருந்தாலும், இன்னும் அனைத்துக் கட்சிகளுடைய கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றுதான் அரசு எண்ணியது. ஆனால், இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு வருகின்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், அனைத்து கட்சிகளையும் அழைக்க இயலவில்லை. இருந்தாலும், முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து தங்களுடைய மேலான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார்.

அனைத்துக்கட்சிகளின் கருத்துகள்

இன்றைய ஆலோசனையின் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம் என திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்துக் கட்சி குழு அமைக்கலாம் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு செயல்பாடுகளுக்கு மின்சாரம் தரக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்றும் கையகப்படுத்திய பிறகு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

முக்கியத் தீர்மானங்கள்.. அனைத்துகட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றம்

இன்றைய அனைத்துக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பிராண வாயு தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் பிராண வாயு ஆலையை மட்டும் இயக்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1)    உச்சநீதிமன்ற உத்தரவின்படி  தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். பிராண வாயுவின் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம்.  இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின்உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

2)    உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

3)    பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய  தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள்.  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும்.  எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.

4)    இந்நேர்வில், தற்காலிக பிராண வாயு உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்பு குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம்,  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர்.  இந்த குழு, பிராண வாயு தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும். 

5)    தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும்.  தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயு பிற மாநிலங்களுக்கு வழங்கலாம். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, ஆலையை மூடியதே தமிழக அரசுதான். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் செயல்பட 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்றைய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், எஸ். கிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம், (ஓய்வு), மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments