Breaking News

ஆக்சிஜன் விநியோகத்தை சீராக்க தேசியளவிலான திட்டம் தேவை : உச்சநீதிமன்றம் கருத்து

புதுடெல்லி:

இந்தியாவில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு துவங்கி இன்று விசாரணை நடத்தியது. அப்போது நாட்டில் கோவிட் 19 தொற்றை தடுக்கவும் ஆக்சிஜன், தடுப்பு மருந்து விநியோகத்தை சீராக்கவும் தேசியளவிலான திட்டம் தேவை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


நாடு முழுவதும் கோவிட் 19 இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல மாநிலங்களில் கோவிட் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் பொதுமக்களுக்கான கோவிட் 19 தடுப்பூசியும் போதுமான அளவில் இல்லை என பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நாட்டில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசின் தவறான நிர்வாகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தியது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு நடத்திய இந்த விசாரணையில் நாட்டில் கோவிட் -19 தடுப்பூசி போடும் முறை மற்றும் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் பரிசீலிப்பதாகக் கூறியது. மேலும் ஊரடங்கு குறித்து அறிவிப்பை வெளியிட உயர் நீதிமன்றங்களின் நீதி அதிகாரம் தொடர்பான அம்சத்தை ஆராயும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோவிட்-19 தொடர்பான விஷயங்கள் குறித்து டெல்லி, மும்பை, சிக்கிம், மத்திய பிரதேசம், கொல்கத்தா மற்றும் அலகாபாத் ஆகிய ஆறு உயர் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இது இந்த விவகாரத்தில் குழப்பத்திற்கு வழிவகுக்கிறது.

ஆக்ஸிஜன் விநியோகம், அத்தியாவசிய மருந்துகள் விநியோகம், தடுப்பூசி விநியோகம், தடுப்பூசி போடும் முறை ஆகிய நான்கு பிரச்சினைகள் குறித்து நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். மேலும் ஊரடங்கு குறித்து அறிவிக்கும் அதிகாரத்தை நாங்கள் மாநிலங்களிடமே வைத்திருக்க விரும்புகிறோம். இது நீதித்துறை முடிவாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.

நாட்டில் கோவிட்-19 தொற்றை தடுக்கவும் ஆக்சிஜன், தடுப்பூசி விநியோகத்தை சீராக்கவும் மத்திய அரசு தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவை இந்த வழக்கு விசாரணைக்கான அமிகஸ் கியூரி - நீதித் துறை உதவியாளராக  உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (ஏப்-23ந்தேதி )  விசாரிக்கப்படும் என அறிவித்தது. கோவிட்-19க்கான தேசிய திட்டத்தை உயர் நீதிமன்றங்கள் விசாரணையின் போது மத்திய அரசு முன்வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

No comments

Thank you for your comments