Breaking News

வாக்கு எண்ணும் மையத்தின் மேல் ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு- தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஏப்.21-

நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே நேற்று ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே நேற்று ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதவாது, நாகை அடுத்த தெத்தி பகுதியில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த மையத்தின் மேல் ட்ரோன் கேமரா சுற்றி சுற்றி பறந்துள்ளது. சுமார் 1/2 மணி நேரம் கேமரா பறந்து சென்றது.



இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் அங்கு குவிந்த கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரவின் பிநாயரிடம் புகார் அளித்தனர்.

மேலும் அந்தக் கல்வி நிறுவனம் ஆளும் அதிமுகவிற்கு ஆதரவாகவே இருக்கும் என நாகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய 3 மாணவர்கள் விடுமுறைக்காக நாகைக்கு வந்ததும், அவர்கள் கல்லூரி அருகே உள்ள கிராமத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டதில் அந்த கேமரா வாக்கு எண்ணும் மையம் மேல் பறந்ததும் தெரிவந்தது. 

இதைதொடர்ந்து போலீசார் மாணவர்கள் 3 பேரையும் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் கழுகுபார்வை காட்சிகளை பதிவு செய்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments

Thank you for your comments