மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார்... மாலை உடல் தகனம்... தலைவர்கள் இரங்கல்...
சென்னை:
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக்(59) இன்று காலமானார்.
![]() |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் , தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதற்கிடையே, நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தடுப்பூசி குறித்து எதிர்மறையான கருத்துகள் இணையத்தை சுற்றி வலம் வந்தன.
இதுகுறித்து வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் ராஜு சிவசாமி உள்ளிட்ட மருத்துவர்களும் சுகாதாரத் துறை செயலாளரும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது மருத்துவர் கூறுகையில் நடிகர் விவேக்கிற்கு அவரது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய அவரை அவரது மனைவியும் , மகளும் அழைத்து வந்தார்கள். அப்போது அவருக்கு அவசர உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து ஆஞ்சியோ செய்ததில் அவருக்கு இடது கரோனரி ஆர்டரியில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது. பொதுவாக வலது கரோனரி ஆர்டரி, இடது கரோனரி ஆர்டரி என இரண்டு இருக்கும்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் அவருக்கு ரத்தக் குழாய்களில் இருந்த அடைப்பு முழுவதும் நீக்கப்பட்டது. இதையடுத்து அவரது இதயத்தை சீராக இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ஆபத்தான நிலையில்தான் உள்ளார். 24 மணி நேரம் கழித்தே சொல்ல முடியும் என்றார் மருத்துவர்.
இந்நிலையில், எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
சின்ன கலைவாணர்@Actor_Vivek நகைச்சுவை கலைஞர் அவர்களின் மறைவு செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது
பல்கலை வித்தகராக விளங்கியவர் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர்
பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்
தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டிருந்தார்
சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்
இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக் கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டது!
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக நேற்று சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் நடிகர் விவேக்.
கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
பல்கலை வித்தகர், சின்ன கலைவானர் நடிகர் விவேக் அவர்களின் மறைவு மனதை வாட்டி வதைக்கின்றன.
நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்கவும் வைத்தும், சிந்திக்கவும் வைத்தவர், இன்று அவரது மறைவால் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி அழ வைத்துள்ளார். ஜாதி மதங்களை கடந்து அனைவரும் ஒன்று என முற்போக்கு சிந்தனைகளை கொண்டவர்... அனைவராலும் போற்றப்படுபவர்... நடிகர் என்பதை கடந்து சிறந்த சமூக ஆர்வலராக மூடநம்பிக்கைகளை களைய வேண்டும் என சமூக சிந்தனையுடன் அயராது உழைத்தவர்...
இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சின்னக் கலைவாணர் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமோடு நெருங்கி பழகிய நடிகர் விவேக். அப்துல் கலாம் ஐயாவின் சொல்படி 1 கோடி மரக்கன்றுகளை நட்டு வைக்கும் திட்டத்தில் மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை கிரீன் கலாம் என்ற தொடங்கப்பட்ட அமைப்பு மூலம் நட்டு விட்டார். அந்த வகையில் அப்துல் கலாமின் பிறந்த நாள்அன்று சமூக வலைதளங்களில் #plantforkalam என்று ஒரு ஹேஷ் டாக் உருவாக்கினார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதை ட்ரெண்ட் ஆக்கும் படி மக்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். அவரின் கோரிக்கைக்கு இணங்க மக்களும் அவரது ஹேஷ் டாக்கை ட்ரெண்ட் செய்தனர். சிலமணி நேரங்களிலேயே அது உலகளவில் ட்ரெண்ட் ஆனது. நடிகர் விவேக்கின் இந்த மரம் நடும் சேவையை பல பிரபலங்கள் ஆதரித்தனர்.
அவர் மறைந்தாலும், அவர் நட்டுவைத்து மரங்கள் அவரது சுவாச காற்றை வீசிக்கொண்டே இருக்கும்... அவர் எண்ணங்களை நாம் உறுதி கொண்டு ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் இயற்கையை காக்க வேண்டும்.. மரங்களை நட வேண்டும்...
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள், அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருந்தார்.
நடிகர் செந்தில்
திரைத்துறையில் திறமையான நடிகர் விவேக். சுற்றுச் சூழலுக்காக போராடியவர் என்று தனது இரங்கல் செய்தியில் நடிகர் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மயில்சாமி
நல்ல தர்ம சிந்தனை உள்ளவர். அவருடைய இழப்பு எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.
நடிகர் சூரி:
அவர் மறைந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் மறைவை நினைத்து மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்.
டி.டி.வி.தினகரன்
நல்ல சமூக சிந்தனை உடையவர், செயற்பாட்டாளர் நடிகர் விவேக்.
நடிகை ராதிகா
நடிகர் விவேக் மரண செய்தி எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
இயக்குநர் மோகன் ராஜா
இயக்குநர் மோகன் ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டில், விவேக் சார் அதிர்ச்சியாக உள்ளது.. இந்த லெஜன்ட் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.. எம் குமரன் படத்தில் அவருடன் பணியாற்றியது பொக்கிஷமாக இருக்கும்.. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் டி இமான்
இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள டிவிட்டில், எங்கள் விவேக் சார் இல்லை என்ற உண்மையை என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றன.. என்ன ஒரு அசாதாரண கலைஞரையும் ஒரு மனிதரையும் நாம் இழந்து விட்டோம்.. அவரது நெருங்கிய குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல்.. என பதிவிட்டுள்ளார்.




No comments
Thank you for your comments