வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு...!-கமல்ஹாசன் புகார்
சென்னை, ஏப்.21-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் திடீரென சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு, மர்மமான வகையில் கண்டெய்னர்கள் வருகை, மர்ம மனிதர்கள் நுழைவு ஆகியவை சந்தேகத்தை எழுப்புவதாக நடிகர் கமல்ஹாசன் நேற்று (20-04-2021) கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் புகார் மனுக்களை வழங்கினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் கமல்ஹாசன்...
வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பது, கன்டெய்னர்கள் மர்மமான முறையில் வந்து செல்வது, இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் அரசியல் கட்சியினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
ஏற்கனவே 30 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை இது போன்ற மர்மங்கள் தொடர்ந்தால் பொதுமக்களிடையே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை குறைந்து விடும்.
இது போன்ற நிகழ்வுகள் தொடர்வதென்பது ஜனநாயகத்திற்கே ஆபத்து எனவே தான் முதற்கட்டமாக புகார்களை வழங்கியுள்ளோம்.
இதுபோன்ற செயல்களால் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலே புகார்களை வழங்கியிருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அந்த அறையைச் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு தன்னிச்சையாகவே செயலிழப்பது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கண்டெய்னர் லாரிகள் வருவது மேலும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ரூம் பகுதிக்கு லேப்டாப்களுடன் நபர்கள் வருவது உள்ளிட்டவை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டினார்
இவை அனைத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே அன்றி எங்களை பாதுகாப்பதற்கு அல்ல என தெரிவித்தார்.
இதைப்போன்ற நிலைமை நான் போட்டியிட்ட தொகுதி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் இல்லாமல், தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுவதாக குற்றம் சாட்டினார்
வாக்கு பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் நிலை தற்போதும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையாகவும் திருப்திகரமாகவும் இல்லை என குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், நடிகர்கள் வாக்களிக்க வந்ததே மிகப்பெரிய விஷயம் என்று தெரிவித்தார்

No comments
Thank you for your comments