ஒருங்கிணைப்பு குழுவுடன் அரசு தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்.20ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி முக்கிய துறைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் அமைத்துள்ளார்.
இந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கூட்டத்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமை தாங்கினார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அளவுக்கு உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், வெளி மாநில தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வெளி மாநிலத்துக்கு செல்ல ஏராளமான தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் அதை சமாளிப்பது குறித்தும்
கொரோனா பாதிப்பு குறைந்தால்தான் மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும்
தற்போது கொரோனாவுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் 85,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளதால் கொரோனா பரவுவதை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்தும்
கொரோனா தொடர்ந்து பரவி வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ஜெகநாதன், அரசு ஆலோசகர் சண்முகம், கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

No comments
Thank you for your comments