மே மாதம் ஆன்லைனில் அரியர் தேர்வு... ! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை:
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், என்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாய படிப்பு, மருத்துவ படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதை தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு, கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த தேர்வு மே மாதம் ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்-லைன் மூலமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும். தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைகழக மானிய குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை 8 வாரத்துக்குள் விரைந்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


No comments
Thank you for your comments