தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை:
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியில் தெரிவித்த விவரத்தில், தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். என வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். என வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments