தாளவாடி அருகே கல்குவாரியில் கம்பீரமாக படுத்திருந்த சிறுத்தை...விவசாயிகள் பீதி.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பீம்ராஜ்நகர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இங்கு சுற்றி திரியும் சிறுத்தை அவ்வப்போது விவசாய நிலங்களில் நுழைந்து அவ்வப்போது கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பீம்ராஜ்நகர் கிராமத்தில் தொட்டகாஜனூர் மெட்டலவாடி சாலையில் உள்ள செயல்படாத கல்குவாரியில் கல்லின் மீது சிறுத்தை ஒன்று கம்பீரமாக படுத்திருந்தது.
சிறுத்தை படுத்திருந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.
சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். விவசாய நிலங்களிலும், கல்குவாரி பகுதிகளிலும் சுற்றித்திரியும் சிறுத்தையை தொடர்ச்சியாக கண்காணித்து உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments
Thank you for your comments