Breaking News

மோடி தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது - பள்ளம் ராஜூ குற்றச்சாட்டு

 விருத்தாசலம்:

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் பார்வையாளரும், முன்னாள்மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பள்ளம் ராஜூ விருத்தாசலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:



தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், காங்., 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதில், விருத்தாசலம், மயிலாடுதுறை, அறந்தாங்கி,  காரைக்குடி உட்பட ஆறு தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன்.

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்  பாதையில் சென்றது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுப்பாட்டில் இருந்தது. தடையின்றி பொருட்கள் கிடைத்ததால், விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ஆனால், மோடி தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதித்தனர். ஜி.எஸ்.டி.,யால் சிறுகுறு தொழில்கள் பாதித்தது. மேலும், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவைகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கு முடக்கத்தால், லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். புலம் பெயர் மாநில தொழிலாளர்களின் துயரத்தை கூற முடியாது. நடந்தே ஊருக்கு சென்ற அவலமும் அரங்கேறியது.

வேளாண் திருத்த சட்டங்கள் எந்த விவாதமும் இல்லாமல் அமல்படுத்தியதால், ஜனநாயக மான்பை கேலிக்கூத்தாக்கி விட்டனர். கடந்த 100 நாட்களுக்கு மேலாக டில்லியில் போராடி வரும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல், முள் வேலி அமைத்தும், சாலையில் பள்ளங்கள்தோண்டியும் அவர்களை முடக்க நினைக்கின்றனர்.

விவசாய நிலங்களை அழித்து, எட்டு வழிச்சாலை அமைக்கும் வேலையில் அரசு செயல்படுகிறது. இதுபோன்ற மக்கள் விரோத செயல்களை தடுக்கவும், இந்த ஆட்சியை அகற்றவும் தி.மு.க., – காங்., கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெ., இல்லாததால், அவரது விருப்பத்திற்கு முரணாக பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது.

தி.மு.க., – காங்., கூட்டணிக்கு தமிழக மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது... நன்றாக தெரிகிறது. ஸ்டாலினை முதல்வராக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

காங்., பொறுப்புக் குழு தலைவர் ரங்கமணி, முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, நகர தலைவர் ரஞ்சித்குமார் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments