வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு- முன்னேற்பாடு தீவிரம்...
சென்னை:
வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதில் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளதால், வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளிக்கையில், “இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவுக்காக 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பிறகு, விவிபேட்டில் கோளாறு ஏற்பட்டதால், வேறு விவிபேட் மாற்றப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் 200 ஓட்டுகள் இருக்கும் நிலையில், இந்த இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் விவிபேட் எடுத்து சென்றது விதிமீறல். எனவே, வேளச்சேரி ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும். இரு சக்கர வாகனத்தில் இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறியிருந்தார்.
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வரும் 17 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மறு வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடியில் 548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்களுக்கு மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தண்டோரா அடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு நாளை மாலை 7 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவின் போது வாக்காளர்களின் இடதுகை நடுவிரலில் மை வைக்கப்படவுள்ளது.


No comments
Thank you for your comments