Breaking News

4 விண்வெளி வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்

வாஷிங்டன்: 

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பான், பிரான்சைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.



விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

அவ்வகையில், நாசா-ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் டிராகன் விண்கலத்தை நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 



இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், ஜப்பான், பிரான்சைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  ராக்கெட்டில் இருந்து டிராகன் விண்கலம் தனியாக பிரிந்து, விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் ராக்கெட் பூஸ்டர் பூமிக்கு திரும்பி தரையிறங்கியது. நாளை அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையதை விண்கலம் சென்றடையும். அதன்பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணைக்கப்படும். 4 விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கியிருந்து ஆய்வு செய்வார்கள். 

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த ராக்கெட் மற்றும் விண்கலம் இரண்டும் மறுபடியும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments