Breaking News

பாதுகாப்பு வசதிகளுடன்10ம் வகுப்பு தேர்வு!

சிக்பள்ளாப்பூர் : 

கடந்த ஆண்டை போல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.



கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார்  சிக்பள்ளாப்பூருக்கு வந்தார். சிக்பள்ளாப்பூர் மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் சுரேஷ்குமார், சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு நடத்துவது குறித்து 2 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடமும் அமைச்சர் சுரேஷ்குமார் கருத்துகளை கேட்டறிந்து கொண்டார். 

இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடந்தை ஆண்டை போல இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு வெற்றிகரமாக நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் செய்து அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். தேர்வு நடத்துவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலையும் நிலவுகிறது. மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே மாதம் 24-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். கர்நாடகத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8,75,798 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 3,029 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த தேர்வு மையங்களில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ஜூன் மாதம் 21-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கான அட்டவனையும் விரைவில் வெளியிடப்படும். மாநிலத்தில் மொத்தம் 7,01,651 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு அதிக சுமை கொடுக்கக்கூடாது என்பதற்காக வழக்கமான பாட திட்டத்தில் இருந்து 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 90 முதல் 95 சதவீத பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாடங்களை விரைவில் நடத்தி முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments