தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரம் செய்தால் வேட்பாளர் செலவு கணக்கில் வரும்- மாநகராட்சி கமிஷனர்
சென்னை, மார்ச் 5-
அரசியல் கட்சிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அவர்களது அனுமதியுடன் விளம்பரம் செய்து கொள்ளலாம். அவை தேர்தல் செலவு கணக்கில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. பொது இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர் தல் விதிமுறைகளை கண் காணிக்க பறக்கும் படை, நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விளம்பர வாசகங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் கூறியதாவது:-
அரசியல் கட்சிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அவர்களது அனுமதியுடன் விளம்பரம் செய்து கொள்ளலாம். அவை தேர்தல் செலவு கணக்கில் கொண்டு வரப்படும். அரசியல் கட்சி பெயரில் விளம்பரம் இருந்தால், அந்த கட்சியின் செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர் பெயர் இருந்தால், அந்த வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
பொது இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments
Thank you for your comments