Breaking News

கோவை தெற்கு தொகுதியை பாஜவிற்கு கொடுத்தால், கட்சியை விட்டு விலகுவோம்-அதிமுகவினர் தர்ணா

கோவை, மார்ச் 10-

கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்காவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக அதிமுக நிர்வாகிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாஜக வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்ககூடாது எனவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு தொகுதியை ஒதுக்க அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவிற்கு ஒதுக்காவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக அதிமுக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வென்றது.

கோவை தெற்கு தொகுதியில் கோவை  அம்மன் அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்தமுறை அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா இடம்பெற்றுள்ளது. தொகுதி பங்கீட்டில் கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதாவுக்கு வழங்கப்படும் என்று தகவல் கசிந்துள்ளது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகை முன்பு குவிந்தனர்.

மேலும் கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு கொடுக்காவிட்டால் தாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போவதாக கோஷங்களை எழுப்பினர்.   இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்து இன்னும் யார் யாருக்கு எந்த தொகுதிகள் என்று அறிவிக்காத நிலையில் கோவை தெற்கு தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு கொடுத்து விடக்கூடாது என்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்  செய்தது கோவை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது அதிமுக கூட்டணி கட்சிகள் இடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments