மியான்மரில் தொடரும் வன்முறை... ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் தொடர் பலி!
நேபிடாவ், மார்ச் 4-
மியான்மரில் கடந்த மாதம் ராணுவ ஆட்சி அமலானதை கண்டித்தும், ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலுயுறுத்தியும் யாங்கோன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்ந்து உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி அந்த நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மார் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரி நடைபெறும் இந்த போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை மீறி போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை ராணுவம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவம் கைது செய்தது.
இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேசமயம் ராணுவத்தினரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்றும் யாங்கூன், மாண்டலே, மைங்கியன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை விரட்டியடிக்க ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் சுட்டதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதில் மியான்மரின் மத்திய நகரில் 5 பேர் மண்டலே நகரில் 2 பேர் யங்கூன் மற்றும் மைங்கியன் நகரங்களில் தலா ஒருவர் என மொத்தம் 9 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இப்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments
Thank you for your comments