Breaking News

கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து முனை யுக்தி

  புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் 2வது அலை  மீண்டும் தலைவிரித்தாடுகிறது. நாடு முழுவதும் தொற்று பரவல் இல்லாவிட்டாலும் கூட, 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.



மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மார்ச் 27ம் தேதியில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 79.57% பதிவாகியுள்ளது.  62,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36,902 பேரும், பஞ்சாபில் 3,122 பேரும், சத்தீஸ்கரில் 2,665 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 4,52,647 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.8 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆக (94.84%) மார்ச் 27ம் தேதி பதிவாகியுள்ளது.  30,386 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகம், கர்நாடகம், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 1500-க்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து 2-வது நாளாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.  இந்த நிலையில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு மார்ச் 27ம் தேதி காணொலி காட்சி வழியாக உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார். இதில் மராட்டியம், குஜராத், அரியானா, தமிழ்நாடு, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய 12 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாட்டின் 46 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், நகராட்சி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.  நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பாலும் இதில் கலந்து கொண்டார்.

அப்போது ராஜேஷ் பூஷண் பேசுகையில், அதிகளவு பாதிப்பை கொண்டுள்ள 46 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் தீவிர கவனம்செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பரிசோதனையை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகளவில் சார்ந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களையும் பரிசோதித்து தனிமைப்படுத்த 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இம்மாதத்தில் நாடு முழுவதும் பதிவான 71 சதவீத தொற்றுகள் மற்றும் 69 சதவீத உயிரிழப்புகள் 46 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. 

கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூட்டத்தின் போது ஐந்து முனை யுக்தி ஒன்று வகுக்கப்பட்டது.

பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல்: 

பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல்; 

பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல்; 

சரியான கொவிட் நடத்தை விதிமுறையை உறுதி செய்தல்;

மற்றும் அதிகளவில் பாதிப்புகளை பதிவு செய்து வரும் மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறை 

ஆகியவையே  இந்த ஐந்து முனை யுக்தி ஆகும்.

மேலும், மாநிலங்கள் கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இவை:-

70 சதவீத பாதிப்புகளை கொரோனாகால விதிமுறைகளை பின்பற்ற செய்து கட்டுப்படுத்த முடியும் என மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

முன்னுரிமை பிரிவினருக்கு தடுப்பூசிகளை போடுவதில் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டது.

தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் ஆகிய 4 இடங்களில் உள்ள தடுப்பூசி கிடங்குகளில் போதுமான தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments