பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னை, மார்ச் 23-
தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, விகே சிங் ஆகியோர் வெளியிட்டனர். மாநில பாஜக தலைவர் எல்.முருகன்,எச். ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ.க, நேற்று 'தொலை நோக்கு பத்திரம்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழக மேல்சபை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி மேலும் 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும்.
5 ஆண்டுக்கு ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்படும். தேவையான மணல் இறக்குமதி செய்யப்படும்.
18 முதல் 23 வயது வரையிலான மகளிருக்கு இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியலின மக்களிடமே வழங்கப்படும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
மின்னணு குடும்ப அட்டை தாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேடியாக வழங்கப்படும்.
முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.
விதவைகள் நலவாரியம் அமைக்கப்படும். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்
பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். வேலை இழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர்.
தாய் மொழியில் மருத்துவக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படும்.
ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் கோவில் ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர்.
இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.
உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்படும்.
இவ்வாறு, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments