தேமுதிக-வை இழுத்தடிக்கும் அதிமுக...மதில் மேல் உள்ள பூனையாய் திண்டாடி வருகிறது...
சென்னை:
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல், அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிப்பதற்கான காரணம் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளன. மதில் மேல் உள்ள பூனையாய் திண்டாடி வருகிறது.
திமுக பக்கம் சாயலாமா என்பது...!, மற்றொன்று தனித்து போட்டி என்பது...! இதில், திமுக கூட்டணியில் இணைய ஏற்கனவே முயற்சிகள் நடந்த ஒன்றுதான்.. சுதீஷூக்கு இதில் விருப்பம் என்றாலும், பிரேமலதாதான் இந்தகூட்டணிக்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்பட்டது.. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்தபோதுகூட இப்படி ஒரு இழுபறி கூட்டணிகளில் இருந்ததில்லை.. ஆனால், இந்த முறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கட்சியாகவே தேமுதிக தென்பட்டு வருகிறது.. அதனால்தான் பிரேமலதா சொன்ன எந்த பேச்சுமே அதிமுக தலைமையிடம் எடுபடவில்லை.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்த தே.மு.தி.க. 7.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது. ஆனால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் 3-வது அணியாக உருவெடுத்த மக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. தலைமை தாங்கியது. 104 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கிய தே.மு.தி.க. ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. பல இடங்களில் டெபாசிட்டையும் இழந்தது... தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., தொடர்ந்து அந்தக் கூட்டணியிலேயே நீடித்து வருகிறது.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை வழங்கியுள்ளது. ஆனால், பா.ம.க.வுடன் திரை மறைவு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியபோதே, கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அ.தி.மு.க. அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், பா.ம.க.வுடன் கடந்த மாதம் 27ம்தேதி கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்ட நிலையில், அன்று இரவு தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வருவதாக அ.தி.மு.க. தூது அனுப்பியது.
ஆனால், அதை தே.மு.தி.க. கண்டுகொள்ளவில்லை. தே.மு.தி.க. பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற நிலையில், தகவல் கிடைத்தும் சென்னை திரும்பவில்லை. இதேபோல், தே.மு.தி.க. துணைச் செயலாளரான எல்.கே.சுதீசும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை.
இந்நிலையில், 27ம் தேதி அன்று இரவு அ.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். ஆனால், அங்கு உடல்நலிவுற்ற நிலையில் ஓய்வு எடுத்துவரும் விஜயகாந்த் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சூழ்நிலையை புரிந்துகொண்டு அவர்களும் விஜயகாந்தை மட்டும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
எனினும் தேமுதிகவின் அதிருப்தியை போக்கவும், கூட்டணியை உறுதி செய்யவும், மின்துறை அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில், தே.மு.தி.க. அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதால், அதைவிட அதிகமான தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு வழங்க வேண்டும் என்றும், பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருப்பதாகவும், தங்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அதிமுகவை பொறுத்தவரை, மொத்தமே 10 தொகுதிகளைதான் ஒதுக்க முடிவு செய்துள்ளது.. வேண்டுமானால் 2 சீட் கூடுதலாக தரலாமே தவிர, மற்றவைகளுக்கு வாய்ப்பில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. என்றாலும், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர அமைச்சர் பி.தங்கமணி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தே.மு.தி.க. தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை.
இதில் இன்னொரு சிக்கலும் தேமுதிகவுக்கு வந்துள்ளதாம்.. அதாவது பாமக கேட்ட அந்த 23 தொகுதிகள் லிஸ்ட்டில் தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகளும் கிட்டத்தட்ட 10க்கு மேல் உள்ளதாம்.. இதுதான் இந்த இழுபறிக்கு முக்கிய காரணமாக உள்ளது என தற்போது தகவல் கசிந்துள்ளது...
இது சம்பந்தமான உடன்பாட்டில் கையெழுத்திடவும் டைம் தரப்பட்டிருந்த நிலையில்தான், விஜயகாந்த் வீட்டில் திடீரென ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததாம்.. பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாம்.. ஒன்று, திமுக பக்கம் சாயலாமா என்பது, மற்றொன்று தனித்து போட்டி என்பதும்... இதில், திமுக கூட்டணியில் இணைய ஏற்கனவே முயற்சிகள் நடந்த ஒன்றுதான்.. சுதீஷூக்கு இதில் விருப்பம் என்றாலும், பிரேமலதாதான் இந்தகூட்டணிக்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்பட்டது.. ஏனென்றால், அதிமுக-,பாஜ.க கூட்டணியிலேயே இருந்தால்தான், ராஜ்ய சபா சீட்டை இந்த முறையாவது கேட்டு வாங்கிட முடியும் என்பது பிரேமலதாவின் கணக்காக இருந்தது.
அதற்கு பிறகு திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேருமா என்பது குறித்த பேச்சே எங்கும் எழவில்லை. இதை பற்றிதான் மறுபடியும் விவாதித்தாக சொல்கிறார்கள். இது உண்மையா என்று தெரியவில்லை.. ஒருவேளை உண்மையான தகவலாக இருந்தால், திமுக இதை நிச்சயம் பரிசீலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அதற்குள் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம் அரங்கேறியுள்ளது. அதாவது, தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு அதிகமாக கேட்கிறது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 தொகுதிகள் வரைதான் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ராகுல்காந்தி தமிழக வருகையால் அவருடன் இருந்த காங்கிரஸ் தலைவர்கள், நாளை (புதன்கிழமை) தான் மீண்டும் பேச வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்குள், தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உறவினர் ஒருவர், தே.மு.தி.க.வுக்கு தூது சென்றதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியேறினால், உங்களை (தே.மு.தி.க.) கூட்டணிக்கு அழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது.
அதனால், அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தைக்கு செல்லாமல், தே.மு.தி.க. பின்வாங்கியுள்ளது. காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவை வைத்தே, தே.மு.தி.க. தனது முடிவை எடுக்கப்போவதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த சூழலில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்கே சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என பதிவிட்டுள்ளதால் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜயகாந்த் என்று குறிப்பிட்டிருப்பதை பார்த்தால், ஏற்கனவே பிரேமலதா சொன்னதுபோல சிங்கம் சிங்கிளாகவே வருமோ? என்ற சந்தேகம் எழுகிறது.. மற்றொரு புறம், இது அதிமுகவுக்கான மறைமுக எச்சரிக்கையா..? என்ற எண்ணம் தோன்றிகிறது.
சில நாட்களுக்கு முன்புகூட தேமுதிக தனித்து போட்டி என்று விஜயபிரபாகரன் சொல்லி இருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. எனினும் இது உண்மை என்று நம்பி ஆங்காங்கே தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்... விருப்ப மனு முடிந்து, 6-ம் தேதி நேர்காணலையும் நடத்த போகிறார்கள்.. ஆனால், கூட்டணியா? தனித்து போட்டியா? என்பதை அதிகாரப்பூர்வமாக இதுவரை தேமுதிக அறிவிக்கவில்லை.
தனித்து போட்டி என்ற முடிவு என்றால், அதை பலர் பரவலாக வரவேற்கவே செய்கின்றனர்.. அப்போதுதான் சொந்த கட்சியின் பலம் தேமுதிகவுக்கு தெரியும் என்பதும், இனியாவது தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணரக்கூடும், மேலும் தங்கள் சுயமரியாதையை இழக்காமல் பார்த்து கொள்வார்கள் என்றும் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
ஒருவேளை திமுகவுடன் இணைவார்களா? அல்லது ஏற்கனவே சசிகலாவை ஏகத்துக்கும் பிரேமலதா புகழ்ந்து வைத்துள்ளதால், அமமுகவுடன் இணைவார்களா? அல்லது சுதீஷ் சொன்னதுபோல தனித்தே போட்டியா? தெரியவில்லை.. எனினும் கூட்டணிக்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால், நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல முடிவு எட்டப்படும்.. பார்ப்போம்..!

No comments
Thank you for your comments