முதலமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்- எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல ...ஆ.ராசா
ஊட்டி:
எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல. பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி சர்ச்சை அளிக்கும் வகையில் பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
ராசாவின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராசாவை கண்டித்து நேற்று சென்னை, சேலம் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி, ராசாவின் பேச்சு குறித்து வருத்தப்பட்டு மிகவும் கண் கலங்கினார். எடப்பாடி பழனிசாமி கண்கலங்கியது பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தாயார் பற்றி தெரிவித்த கருத்துக்காக ஆ.ராசா இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊட்டியில் இன்று அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,
முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக நான் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன். என் பேச்சை சுட்டி காட்டி முதலமைச்சர் கண் கலங்கியதால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் கலங்கினார் என்பதை கேட்டு நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.
சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல போனால் முதலமைச்சர் அரசியலுக்காக அல்லாமல் உண்மையிலேயே அவர் காயப்பட்டிருந்தால் எனது மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதளவும் தயக்கம் இல்லை.
முதல்வர் மற்றும் கட்சிக்காரர்களுக்கு நான் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு 2 தலைவர்கள் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள 2 அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும், ஒப்பீடும்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments
Thank you for your comments