Breaking News

மியான்மரில் ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் பகிரங்க மிரட்டல் விடுப்பு

நேபிடாவ்:

மக்களின் போராட்டத்துக்கு மத்தியில் மியான்மர் ராணுவம்  மார்ச் 27ம் தேதி அன்று ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் போராட்டக்காரர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

Myanmar’s Chief Senior General Min Aung Hlaing, commander-in-chief of the Myanmar armed forces

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இதனை தொடர்ந்து,  கடந்த மாதம் 1ம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து, அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

பிப்ரவரி 1 முதல் இப்போது வரை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 320க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆனாலும் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். 

ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் பகிரங்க மிரட்டல் விடுப்பு

இந்நிலையில் மக்களின் போராட்டத்துக்கு மத்தியில் மியான்மர் ராணுவம்  ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. 

இதையொட்டி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் போராட்டக்காரர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இதுபற்றி அவர் பேசுகையில்,  

‘‘முந்தைய அசிங்கமான மரணங்களின் சோகத்தில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தலையிலும் பின்புறத்திலும் சுடப்படும் அபாயத்தில் இருக்கிறீர்கள். கோரிக்கைகளை முன் வைப்பதற்கு ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பையும் பாதிக்கும் வன்முறை செயல்களை ஏற்க முடியாது’’ என‌ கூறினார். 

அதேசமயம் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த அவர் அதற்கு மக்கள் ராணுவத்துடன் கைகோர்த்து பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

அதேபோல் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

போராட்டம் - தீ வைப்பு

இந்தநிலையில் நேற்று  யாங்கூன் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் ராணுவத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். 


பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடினர். சில இடங்ளில் தீ வைப்புச் சம்வங்களும் நடைபெற்றன. 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தை நசுக்குவதற்காக ராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 114 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுகொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனின் இன்சீன் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் 21 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர ஒருவர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

ராணுவ தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தற்போது மியான்மர் நாட்டில் ராணுவத்தின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கும் சிஆர்பிஹெச் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

அமெரிக்கா கண்டனம்

இதற்கு மத்தியில், மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறைக்கு திகிலூட்டும் வகையில் இருப்பதாக விமர்சித்துள்ள அமெரிக்கா,  ராணுவம் பயங்கரவாத ஆட்சி நடத்துவதாக கடுமையாக சாடியுள்ளது.  மியான்மரின் துணிச்சல் மிக்க  மக்கள் இராணுவத்தின் பயங்கரவாத ஆட்சியை நிராகரிக்கின்றனர் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

No comments

Thank you for your comments