Breaking News

வாக்காளர்களுக்கு தனி கையுறை வழங்கப்படும்...சத்யபிரதா சாஹூ

சென்னை, மார்ச் 8-

வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல 2 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தனி கையுறை வழங்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.   இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.    வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது,  மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது.  

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வருவதற்கு 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.  24 மணி நேரம் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்

 தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தல் பணிகளில் மொத்தம் 4,79,892 தேர்தல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  சட்டமன்றத் தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  சட்டமன்றத்  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும்.  தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை 76 அரங்குகளில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 சுமார் 50 % வாக்குப்பதிவு மையங்கள் வெப் கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.  வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆணையம் கூறும் இதர 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  கடைசி 1 மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.  வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தனி கையுறை வழங்கப்படும். இவ்வாறு,  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

No comments

Thank you for your comments