8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல் நடத்தி மெகா சாதனை படைத்த அதிமுக!
சென்னை, மார்ச் 4-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியி விருப்பமனு அளித்த வேட்பாளர்களுடன் அதிமுக தலைமையகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று (04.03.2021) நேர்காணல் நடத்தியது. அகில உலக வரலாற்றிலேயே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த 8,000 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல் நடத்தி மெகா கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது அதிமுக.
அதிமுக விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை (மார்ச் 3) அன்று நிறைவடைந்ததை அடுத்து விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் இன்று (04.03.2021) வியாழக்கிழமை நேர்காணல் தொடங்கி நடைபெற்றது. சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கியது. விருப்ப மனு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட 10 நாள்கள் அவகாசத்தில் மொத்தமாக 8,250 பேர் மனுக்களை அளித்துள்ளனர். விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்திருந்தனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று (04.03.2021) காலை 9 மணி முதல் இரவு வரை விருப்ப மனு செய்தவர்களுடன் நேர்காணலை நடத்தினார்கள்.ஷ்
இதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு நேர்காணலை நடத்தியது. இதில் ஒரு தொகுதியிக்கு விருப்ப மனுக் கொடுத்த அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணலை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேர் காணலின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கி வருவதாலும் திடீரென தேர்தல் அறிவித்துவிட்டதாலும் அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்த வேண்டிய சூழல் உள்ளது என்றார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 க்கும் அதிகமானோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர் என்ற அவர், ஆனால் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்றார். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு எந்த வித சேதாரமும், குறைவுமில்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்றார். வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு என்ற அவர் அதனை நோக்கி செல்ல வேண்டும் என்றார்.
ஒருநபருக்கு ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியாமல் கூட்டமாக வைத்து நேர்காணல் என்பதெல்லாம் ஜனநாயகத்தில் பெருங்கூத்து என்றுதான் சொல்லலாம். கூட்டமாக நடத்துவதுக்கு பெயர் கூட்டமே தவிர நேர்காணல் அல்ல என்பதை அதிமுக தலைமை உணரவேண்டும்.
நாங்கள் நேர்காணல் நடத்த ஆசை படுகின்றோம் ஆனால் நேரம் போதவில்லை... நாங்கள் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கூட்டமே இன்று (04.03.2021) நடந்தது என்றால் அது மிகையாகாது. நேர்காணல் என்ற பெயரில் கூட்டம் நடத்தியது அதிமுக என்றுதான் கூறவேண்டும்...
ஜனநாயக மாண்புகளை காப்பாற்றுவதற்காக சர்வாதிகாரத்தனமாக இல்லாமல் இருக்கத்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் கட்டணத்துடன் பெறப்படுகின்றன. கட்டணமாவது கட்சி நிதிக்கு போய்விடும் பிரச்சனை இல்லை. இப்படி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதும் ஜனநாயகத்தின் இன்னொரு பிரதான அம்சம்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர் கட்சிக்காக எத்தனை ஆண்டுகாலம் பாடுபட்டார்? என்ன பணிகள் செய்தார்? அவரது பின்னணி என்ன? கட்சி போராட்டங்களில் பங்கேற்றாரா? என்பதை எல்லாம் வேட்பாளர் நேர்காணல் குழு ஆய்வு செய்யும். அதற்குதான் இந்த நேர்காணல்.
கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த ஜனநாயக மரபுகள் சம்பிராதமாயாகத்தான் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. இருந்த போதும் இந்த சம்பிரதாய நேர்காணல்கள் கூட சர்ச்சைக்குரியதாக இருக்கக் கூடாது என்பதே ஜனநாயக ஆர்வலர்களின் எண்ணம். அதிமுக இப்போது செய்து கொண்டிருப்பது இந்த மரபுகளை சீர்குலைக்கும் செயல் என்பதுதான் இப்போதைய இவர்களின் ஆதங்கம். ஒரே நாளில் 8000க்கும் அதிகமானோருக்கு நேர்காணல் என்பது அப்பட்டமான கண்துடைப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்.
கொரோனா தொற்று பரவும் சமயத்தில், கூட்டம் தவிர்க்கவும் என்று கூறிவிட்டு 8000 நபர்களை ஒருநாளில் கூட்டம் சேர்ப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது... விதிமுறைகள் எல்லாம் வலியவருக்கு இல்லை என்பதையே இச்செயல் சொல்லாமல் சொல்லுகினறன...
ஜனநாயகத்தின் அத்தனை விழுமியங்களும் ஆடிக்காற்றில் அம்மி பறப்பது போல அதிமுகவிடம் பறந்து கொண்டிருக்கிறது.
No comments
Thank you for your comments