75வது சுதந்திர தின விழா... பிரதமர் மோடி தலைமையில் 259 பேர் கொண்ட குழு அமைப்பு
புதுடெல்லி, மார்ச் 6:
இந்த வருடம் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 259 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
குழுவின் உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 28 மாநிலங்களின் முதல்வர்கள், பல மாநில ஆளுநர்கள், பாரத் ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் பலர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.
இந்த குழு இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாட தேசிய மற்றும் சர்வதேச அளவில் திட்டங்களை வகுப்பதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கும். 75வது சுதந்திர தினமான 2021 ஆகஸ்ட் 15ம் தேதிக்கு 75 வாரங்களுக்கு முன்னர் மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாக்கிரகத்தின் 91’வது ஆண்டு விழாவான 2021 மார்ச் 12ம் தேதி கொண்டாட்டங்களை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான இந்த குழுவின் முதல் கூட்டம் நாளை மறுநாள் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஒரு தேசிய அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் செயலாளர்கள் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments