ஏற்றம் காண 7-7-7 திட்டங்கள் அறிவிப்பு-கமல்ஹாசன்
சென்னை, மார்ச் 3:
சென்னை - மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூரில் இன்று (03.03.2021) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக பெண்கள் நல்வாழ்வு, இளைஞர்கள் நலனுக்காக பல்வேறு செயல்திட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் வியூகங்களும் அதிரடிகளும் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே இருக்கிறது.. கமலின் இந்த செயல்பாடுகள், பாரம்பரிய கட்சிகளின் புருவத்தையே உயர வைத்தும் வருகிறது... கடந்த முறை எம்பி தேர்தலை விட இந்த முறை கமலுக்கு மவுசு கூடி உள்ளது.. இப்போது கூடுதலாக எம்ஜிஆரின் செல்ல பிள்ளை, எம்ஜிஆரின் நீட்சி நான், நாளை நமமே என்ற வாசகத்தை முன்னெடுத்து வருவதால், ஓட்டு வங்கியும் பலப்பெறும், சென்ட்டிமென்ட்டும் ஒர்க் அவுட் ஆகும் என்று நம்பப்படுகிறது..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மநீம கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று (03.03.2021) ஆலந்தூரில் களமிறங்கினார் கமல்ஹாசன். முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெண்கள் நல்வாழ்வுக்காவும், இளைஞர்கள் நலனுக்காகவும், விளையாட்டு
மேம்பாட்டுக்காகவம் 7-7-7 செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விளையாட்டு மேம்பாட்டுக்கான 7 திட்டங்கள்
1. ஆரோக்கியமான தமிழகம் இயக்கம்: மக்களிடையே ஒழுக்கம் நேரமின்மை மற்றும் உடற்பயிற்சி ஆகிய நற்பண்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு மக்கள் நீதி மையம் ஆரோக்கியமான தமிழகம் இயக்கத்தை அரசு பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வீடுகளில் இருந்து தொடங்கி வழி நடத்தும்
2.உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம்: ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களை தமிழ்நாட்டிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கு பொது, தனியார் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றிய அளவிலும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவுதல்
3.ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் விளையாட்டு வசதிகள் மற்றும் நல்லிணக்க பூங்காக்கள் அமைத்தல்
4 பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்கள் ஊக்கப் படுத்தப்படும்: மனிதநேய சர்வதேச பார்வையாளர்கள் விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும்
5.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டு வசதிகள்
6.இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வழியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்
7.போட்டிகளின் வரிசைமுறை ஒழுங்கமைத்தல் : தேசிய அளவிலான விளையாட்டுக்களின் அடிப்படையில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வரிசைமுறை ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டி நடத்தப்படும்
இளைஞர்கள் நலனுக்காக 7 செயல் திட்டங்கள்
1. வேலைவாய்ப்பை உறுதி செய்தல் : மக்கள் நீதி மையம் தலைமையிலான அரசு அமையும் போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஆட்சிக் காலத்திற்குள் உறுதி செய்யப்படும்
2. இருப்பிடத்துக்கு அருகாமையிலேயே வேலைவாய்ப்பை உறுதி செய்தல்: அனைத்து பட்டதாரிகளுக்கும் வசிப்பிடத்தில் 100 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும். வேலையை நீங்கள் தேடாதீர்கள், வேலை உங்களைத் தேடி வரும்.
3. சீரமைக்கப்பட்ட வேலையின்மை நிவாரணத்தொகை: வேலை இல்லாத இளைஞர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் வாழும் சூழலின் தேவை அடிப்படையில் வேலையின்மை நிவாரணம் வழங்கப்படும்.
4.இளைஞர்களுக்காக இளைஞர்கள்: ஓர் இளைஞர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால், அவர் சிறப்பு நிதி சலுகைகள் பெறுவதற்கு தகுதி உடையவர் ஆகிறார்.
5. முதல்முறை தொழிலாளர்களுக்கு வட்டியில்லா மின் பைக்குகள் வழங்கப்படும்.
6. ஒழுங்குபடுத்தப்பட்ட தற்காலிக ஒப்பந்த வேலை: தொழிலாளர்களின் கண்ணியம் காக்கபடும் விதமாக வேலையில்லா கால ஊதியம் மற்றும் விபத்துக் காப்பீடு வழங்கப்படும்
7.இளைஞர்கள் பரிமாற்ற திட்டம்: தேசிய மற்றும் மாநில அளவில் உள்ளேயும் வெளியேயும் கல்விக்காகவும், திறமைக்காகவும் இளைஞர்கள் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும்
பெண்கள் நல்வாழ்வுக்கான 7 செயல்திட்டங்கள்
இல்லத்தரசிகளுக்கும் வருமானம், இல்லத்தரசிகளின் கண்ணியம் காக்கப்படுவது மற்றும் அங்கீகாரம் வழங்கப்படுவதை மக்கள் நீதி மய்யம் உறுதி செய்யும்.
1. சீருடை பணியில் 50 சதவீத பெண்கள் : அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத் துறையிலும் 50 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்
2. துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு : துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கென்று அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், 181 பெண்கள் உதவி எண்ணில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.
3. பெண்களுக்கான தயாரிப்புகளின் பொது விநியோகம்: பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசாங்கமே கொள்முதல் செய்து கிராம மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்
4. பெண்களுக்கான மாவட்ட அளவிலான மகளிர் வங்கி : பெண்களால் பெண்களுக்காக பெண்களுக்கென்று... இயங்கும் மகளிர் வங்கி உருவாக்கப்படும்
5.ஒற்றை தாய்மார்களுக்கான ஆதரவின் குடை : கல்வி, வேலை, திறன் மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தனித்து வாழும் தாய்மார்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
6. சிறப்பு பராமரிப்பு கட்டமைப்புகள் : அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவதை உறுதி செய்தல் (பஸ் நிறுத்தங்கள் ரயில் நிலையங்கள் போன்றவை)
7. இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள் ; ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அனைத்து பெண்களுக்கும் இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.
நாளை நமமே!
இவ்வாறு அவர் கூறினார்.





No comments
Thank you for your comments