தைவானில் 2 போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கடலில் விழுந்தன
தைவான், மார்ச் 25-
தைவானில் 2 விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான பிங்டங் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்5இ ரக போர் விமானங்கள் 4 வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.
கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு இதில் 2 விமானங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தன. இதையடுத்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் மாயமான விமானங்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் 2 விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் விமானி ஒருவர் சுயநினைவை இழந்த நிலையில் கடலில் இருந்து மீட்கப்பட்டார். ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் மற்றொரு விமானி மாயமாகியுள்ளார். அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அதே சமயம் அங்கு உள்ள ஒரு நெடுஞ்சாலையில் விமானத்தில் இருக்கை மற்றும் பாராசூட் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான அந்த விமானியை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
No comments
Thank you for your comments