Breaking News

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தடை விதிக்க இயலாது--உயர்நீதிமன்றம் - செய்தி தொகுப்பு

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, மார்ச் 10-

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது என்றார்.



வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடு மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்றும் 10.5% வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் விஜயகுமார் தொடர்ந்த மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தொண்டர்களின் ஆதங்கங்கத்திற்கு மதிப்பளித்த கேப்டன் விஜயகாந்த் 

சென்னை, மார்ச் 10-

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும் ஆதங்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் மதிப்பளித்துள்ளதாக நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். 



தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக , திமுக , மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியன கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு பிரச்சினை குறித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுகவிடம் தேமுதிக 41 தொகுதிகள் கேட்ட நிலையில் பின்னர் 23 ஆக குறைத்துக் கொண்டது. பின்னர் 21 தொகுதிகள், ராஜ்யசபா பதவியும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரியது. ஆனால் அதிமுகவோ கறாராக 15 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட ஒதுக்க இயலாது என்பதை தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் 13 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என அதிமுக கறாராக தெரிவித்துவிட்டது. 

இது தேமுதிகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து தேமுதிக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்தது. இதில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்தார். இதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

இதுகுறித்து தொண்டர்கள் கூறுகையில்,  ஒரு கூட்டணி கட்சி என்றால் மரியாதை வேண்டும். 13 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என அதிமுக கூறுவது ஆணவத்தை காட்டுகிறது. வரும் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது தேமுதிகவுக்கு விடிவுக்காலம் பிறந்துவிட்டது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என பல தேர்தல்களில் தெரிவித்து வருகிறோம்.

பெட்ரோல் டீசல் விலையுயர்வு, கேஸ் சிலிண்டர் விலையுயர்வு, விலைவாசி உயர்வு என சாமானிய மக்களுக்கு தொடர்ந்து சுமையை கொடுத்து வரும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதே நாங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தோம். நாங்கள் சொன்னத்தை விஜயகாந்த் கனிவுடன் கேட்டு எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கூட்டணியை விட்டு விலகிவிட்டார்.

பக்கத்தில் ஏதாவது விழா கொண்டாடினாலும் தேமுதிகவினருக்கு அழைப்பே இருக்காது. மரியாதையே இருக்காது. இத்தனை நாளாக எங்கள் கேப்டனுக்காக கூட்டணி தர்மத்திற்காக பொறுத்துக் கொண்டிருந்தோம். இனி அதிமுக ஆட்சியே அமைக்காது. சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல் தேமுதிகவுக்கும் முதல்வரும் துணை முதல்வரும் துரோகம் செய்துவிட்டார்கள் என தேமுதிகவினர் ஆவேசமாக பேசினர்.


தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும்- வானதி சீனிவாசன்

சென்னை, மார்ச் 10-

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தங்களின் முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை கோயபேட்டில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,  அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தங்களின் முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும். ஏதாவது ஒரு வகையில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது.  பெண்களுக்கு உதவித்தொகை தருவதற்கு பதில் கல்வி, பாதுகாப்பு விஷயங்களில் முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.



2016ஐ விட 2021ல் 11.6 சதவீதம் வாக்குகளை இழக்கிறது அதிமுக! 

சென்னை, மார்ச் 10-

2016ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக 11.6 சதவீதம் வாக்குகளை இழப்பதாக டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 158 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதிமுக கூட்டணிக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தமிழகத்தில் 43.2 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 32.1 சதவீதம் வாக்குகளே கிடைக்கும். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது திமுகவின் வாக்கு சதவீதம் 3.8 அதிகரித்துள்ளது.

அதே போல் அதிமுகவின் வாக்குகளோ 11.6 சதவீதம் சரிவை சந்திப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு 232 (தஞ்சை, அரவக்குறிச்சி நீங்கலாக) தொகுதிகளில் அதிமுக கூட்டணி போட்டியிட்டது. அதில் 136 இடங்களில் வென்றது. வாக்கு சதவீதம் 43.7 சதவீதமாக இருந்தது. கடந்த தேர்தலைக் காட்டிலும் 11.6 சதவீதம் வாக்குகள் இழக்க போகிறது என சர்வே முடிவுகள் கூறுவதை அடுத்து அதிமுக தொண்டர்கள் களப்பணியாற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த வாக்கு சதவீதம் நிச்சயம் மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியோரால் பிரிக்கப்படும் என தெரிகிறது.

அவ்வாறெனில் மேற்கண்ட கட்சிகளின் வாக்குச் சதவீதம் கடந்த தேர்தலை காட்டிலும் அதிகரிக்கும். என்னதான் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொன்னாலும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே பெரும்பாலானோர் நம்பிக்கையாகும். என்ன நடக்கிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments

Thank you for your comments