நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் திறப்பு
அகமதாபாத், பிப்.25-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவீன் வசதிகளுடன் கட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய, பிரதமர் நரேந்திர மோடி பெயரில் கிரிக்கெட் மைதானத்தை இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (24.02.2021) திறந்து வைத்தார்.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவரான உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நரேந்திர மோடி பேரிலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கினார். இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு செயலாளரும் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த பொழுது இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி 'பூமி பூஜை' செய்தனர். இந்த பூமி பூஜையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்டார்.சபர்மதி நதிக்கரையில் 220 ஏக்கர் பரப்பளவில் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகம் ஒன்றுக்கான அடிக்கல்லை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நாட்டினார்.
அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சர்தார் வல்லபாய் படேல் மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
மோட்டேரா ஸ்டேடியம் என்று இருந்த பெயரை "நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. புதிய மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங் கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது.
49,000 ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
8 செ.மீ. மழை பெய்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டியை நடத்தும் வகையில் வடிகால் வசதி உள்ளது. மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்இடி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் மைதானத்தில் நிழல் விழாது. 4 டிரஸ்சிங் ரூம், நீச்சல் குளம், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை உள்ளன.
முதல் கிரிக்கெட் போட்டி: இந்த மைதானத்தில் நேற்று முதல் கிரிக்கெட் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.


No comments
Thank you for your comments