Breaking News

டி.டி.வி.தினகரனை முதலமைச்சராக்க அமமுக பொதுக்குழு தீர்மானம்...!

சென்னை, பிப்.26-

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்வதற்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

டி.டி.வி.தினகரன் தலைமையில் உண்மைத் தொண்டர்களாக பயணிப்போம்.

கழகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப 70 மாவட்ட கழகங்கள் என அமைக்கப்பட்டிருந்ததை 93 கழக மாவட்டங்களாக பொதுச்செயலாளர் விரிவுப்படுத்தியதை அங்கீகரித்தும் 20 சார்பு அணிகளுடன் சேர்த்து நவீன யுகத்தின் தேவைக்கு ஏற்ப புதிதாக 3 சார்பு அணிகள் உருவாக்கப்பட்டதையும் அதற்கான சட்ட விதிகளையும் அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்வதற்கும் பொதுச்செயலாளர் தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.


பெங்களூருவில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்த கட்சியினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீய சக்தி கூட்டம் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுத்து தமிழகத்தை காக்க வேண்டிய பெரும் கடமை கழகத்திற்கு இருப்பதை உணர்ந்து அந்த போராட்டத்தில் வென்று காட்டவும் சூளுரை எடுக்கப்பட்டது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட மத்திய-மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அதன் விற்பனையை ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசுக்கு வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வை மீட்டெடுத்திடவும், தமிழகம் தலைநிமிர்ந்திடவும் தமிழர் வாழ்வு மலர்ந்திடவும் சசிகலாவின் நல்வாழ்த்துக்களோடு செயல்படும் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தமிழக முதல்-அமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைக்க சூளுரைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments