கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு அறிவிப்பு
சென்னை, பிப்.26-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஒரே மாதத்தில் 100 ரூபாய் அதிகரித்து வீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டர் விலை 810 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 முறை ஏற்றப்பட்டது. டிசம்பர் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 என 100 விலையேற்றம் செய்தனர்.
இந்நிலையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 3-வது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் 15-ம் தேதி மேலும் 50 ரூபாய் அதிகரித்து கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாயாக இருந்தது. நேற்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 810 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் 3 முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதுடன் மானியமும் வங்கிகளில் முறையாக வரவு வைக்கப்படாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மெட்ரோபாலிட்டன் நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு சிலிண்டர் விலை நேற்றைய விவரம்:
அடைப்புக்குறிக்குள் பழைய விலை தரப்பட்டுள்ளது. டெல்லி ரூபாய் 794 ( 769) / கொல்கத்தா ரூபாய் 820 (795) / மும்பை ரூபாய் 794 (769 ) / சென்னை ரூபாய் 810 ( 785) / ஹைதராபாத் ரூபாய் 846 (821. 50) /
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 100 தாண்டிவிட்டது மற்ற நகரங்களில் ரூபாய் 100 தொட்டுவிடும் நிலையில் உள்ளது. டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
நுகர்வு பொருட்கள். காய்கறிகள் வேளாண் பொருள்கள் ஆகியவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன அதனால் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகக் குறைந்த அளவில் வாய்க்கும் வயிற்றுக்கும் ஆக வாழ்க்கை நடத்தும் நடுத்தர வகுப்பு மக்களும் ஏழை மக்களும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக தங்கள் வாழ்க்கையை நடத்த பெரிதும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றின் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து மற்ற பொருள்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. அத்தகைய விலை உயர்வும் பணவீக்கமும் நடுத்தர வகுப்பு மக்களுக்கு பெரும் அச்சத்தை தருவதாக உள்ளன.

No comments
Thank you for your comments