காட்பாடி ராபர்ட்சன்பேட்டை சுடுகாட்டில் புதர் மண்டி கிடக்கும் அவலம் தொடருது!
வேலூர், பிப்.24-
காட்பாடி ராபர்ட்சன்பேட்டை சுடுகாட்டில் புதர் மண்டி கிடக்கும் அவலம் தொடருது. இதை சரி செய்து தர வேண்டும் வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 சுகாதார அலுவலருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுபோன்ற குறைகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடியில் ராபர்ட்சன்பேட்டை சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் உள்ளது வேதனைக்குரியது. இதை திரும்பிப் பார்ப்பார் யாரும் இல்லை. பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தாலும் வேலூர் மாநகராட்சி 1வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று புகார் மனுவை பொதுமக்கள் கண்ணெதிரிலேயே தூக்கி வீசுகிறாராம். புதர்மண்டி கிடக்கும் சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கும், எரியூட்டுவதற்கும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாக வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஈமச்சடங்கு முடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட செய்து தரப்படவில்லை. இறந்தவர்கள் நிம்மதியாக இறுதியாக தேடி வரும், நாடி வரும் இறுதி ஊர்வலமாக வந்து அமரும் இடமாக சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. ஆனால் இங்கோ நிலைமை தலைகீழாக உள்ளது. இதை சரி செய்து தருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முரண்டு பிடிக்கிறது. பின்னர் என்னதான் வேலை செய்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள் என்று தெரியவில்லை. புதர் மண்டிக் கிடப்பதை அப்புறப்படுத்தி விட்டு நடந்து செல்ல பாதையை சரி செய்து தராமல் வேறென்ன பணிகளை மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெரியவில்லை. பணி செய்யாமல் ஊதியத்தை மட்டும் பெற்றுச் செல்ல பார்க்கின்றனர் இந்த அதிகாரிகள்.
உள்ளாட்சி துறையில் பணியாற்றினாலே இதுபோன்ற பணிகளை செய்து தர வேண்டியிருக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதா? இல்லை தெரியாதது போன்று நடிப்பு காண்பிக்கின்றனரா என்று தெரியவில்லை. அடித்தட்டு மக்கள் உபயோகிக்கும் சுடுகாட்டில் விஷஜந்துக்கள் குடியிருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை சுத்தப்படுத்த நாள்,கிழமை,நட்சத்திரம் பார்ப்பார்கள் போலிருக்கிறது காட்பாடி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் சுகாதார அலுவலர் பாலமுருகன். இவரை எங்கும் பார்க்கவே முடிவதில்லை. பாலமுருகன் என்னதான் பணியாற்றுகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம் ஆகும். கொரோனா காலத்தில் கூட அவர் எங்கும் வெளியில் வந்ததாக தெரியவில்லை. ஏன் இதுநாள் வரையில் அவர் வெளியில் வருவதே இல்லை.கையொப்பம் போட்டு மாத ஊதியம் மட்டும் பெற்றுக் கொள்கிறார் இந்த அதிகாரி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்கள் வரிப்பணத்தில் பிழைக்கும் இதுபோன்ற அதிகாரிகள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவதற்கு மனமும் இல்லை, நேரமும் இல்லையாம்.
இவ்வாறு பொதுமக்களிடம் கூலாக பதில் சொல்லிக் கொண்டு காலம் கடத்தி வருகிறார் இந்த ஏமாற்று அதிகாரி. கொசுக்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எங்கும் கொசு மருந்து அடிப்பதே இல்லை.காட்பாடி பகுதியில் சுத்தம் சுகாதாரம் என்னவென்று கேட்டால் அது கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைக்கு 1வது மண்டலம் காட்பாடி சுகாதார அலுவலர் பாலமுருகனின் செயல்பாடு அமைந்துள்ளது.இதை மாநகராட்சி ஆணையர் சங்கரன் பார்ப்பதே இல்லை. வேலூரில் 2வது மண்டலம் மட்டுமே சிறப்பாக பணிகள் நடக்கிறது. 1வது மண்டலத்தில் பணிகள் நடப்பதே இல்லை. வரும் கொசு மருந்துகள், லைசால் போன்ற கிருமி நாசினிகள்,பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை வெளியில் தனியாருக்கு விற்பனை செய்து விட்டு பணத்தை பாக்கெட்டில் விட்டுக் கொண்டு வீடுகளுக்கு கிளம்பிச் செல்வதை இதுபோன்ற மனசாட்சியில்லாத அதிகாரிகள் காலம் காலமாக செய்து வருகின்றனர். காட்பாடியில் எந்தெந்த பகுதி எங்குள்ளது என்று கூட இந்த பாலமுருகனுக்கு தெரியாது.
அதாவது எது கேட்டாலும் பாலமுருகனுக்கு ÔஅரோகராÕ என்று சொல்கிறாராம். இப்படி மொட்டை அடித்து மாநகராட்சி நிதியை சுரண்டிச் செல்வதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளார் பாலமுருகன். பயமாக இருந்தால் பணியை ராஜிநாமா செய்து விட்டு சென்று விடலாமே. ஏன் இப்படி இருந்து கொண்டு பணியை செய்யாமல் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார் என்று தெரியவில்லை. இந்த ராபர்ட்சன்பேட்டை சுடுகாட்டுக்கு பிணம் கொண்டு செல்லும் பாதையும் கரடு முரடாக உள்ளது. இதையும் சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்து விட்டால் போதும் ஏரிக்கரை என்பதால் வழுக்கி விடுகிறதாம். இதில் பிணத்தை தூக்கிச் செல்வோர் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் கவனமாகச் செல்ல வேண்டியுள்ளது. அதிகாரிகளுக்காக மக்களா?அல்லது மக்களுக்காக அதிகாரிகளா?என்ற சந்தேகம் காட்பாடியில் பணியாற்றும் சுகாதார அலுவலர் பாலமுருகனை பார்த்தால் அனைவருக்கும் எழாமல் இருக்காது. பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்வருவதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும். ஆதலால் விரைவில் போர்க்கால அடிப்படையில் ராபர்ட்சன்பேட்டை சுடுகாட்டை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்றியும், பாதை வசதியை செய்து தர வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 காட்பாடி சுகாதார அலுவலர் பாலமுருகன் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விரைந்து இந்த பணிகளை நிறைவேற்றி தர தவறினால் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வது என்றும், ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளை இந்த பகுதியில் சேர்ப்பதில்லை என்றும் இந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் இறுதி வேண்டுகோளாகவும், எச்சரிக்கையாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு பின்னரும் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகனின் செயல்பாடு என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments
Thank you for your comments