தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம்...
புதுடெல்லி :
தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,618. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,07,73,440. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,61,514. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,57,088. கொரோனா மொத்த பாதிப்பில் முதல் 5 இடங்களில் இருப்பது மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம்.
இந்த நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 86.37% இந்த 6 மாநிலங்களில் இருந்து உருவானது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கொரோனா கண்காணிப்பு, கட்டுப்பாடுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 182 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 4,022 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 490 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 024 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.

No comments
Thank you for your comments