Breaking News

பாலாற்றில் 6 ஆயிரம் வாத்து குஞ்சுகள் சாவு தேங்கியுள்ள தண்ணீர் விஷமாக மாறிய அவலம்!

வேலூர், பிப்.17-

 வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் மேய்ப்பதற்காக சென்ற சுமார் 6 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் திடீரென சுருண்டு விழுந்து இறந்தன. இதற்கு காரணம் பாலாற்று தண்ணீர் விஷமாக மாறியதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகரன். இவர் வங்கியில் ரூ.7  லட்சம் கடன் வாங்கி சுமார் 7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்தார். தினமும் வயல்வெளிகள், பாலாறு உட்பட பல இடங்களில் மேய்த்து வந்தார். இதேபோல் நேற்றுமுன்தினம் காலையும் வயல்வெளி மற்றும் பெருமுகை பாலாற்றில் தேங்கியுள்ள மழைநீரில் மேய விட்டுள்ளார். அவ்வாறு தண்ணீரில் இறங்கிய சிறிது நேரத்தில் வாத்துக்குஞ்சுகள் திடீரென கொத்து கொத்தாக வலிப்பு கண்டு சுருண்டு விழுந்து இறந்தன. சுமார் அரை மணி நேரத்தில் 6 ஆயிரம் வாத்துக்குஞ்சுகளும் தன் கண்ணெதிரிலேயே சுருண்டு விழுந்து இறந்ததை கண்ட சுதாகரன் என்ன செய்வது என அறியாமல் கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தண்ணீரில் இறங்காத வாத்துக்குஞ்சுகளை வேறு இடத்துக்கு விரட்டி விட்டதால் அவை தப்பின.

இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை பல்கலைக்கழக நிபுணர்கள், அலமேலுமங்காபுரம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மேலும் பாலாற்று குட்டை நீர், பாலாற்றங்கரையில் உள்ள நெற்பயிர், வயல்வெளிகளில் தேங்கியிருந்த தண்ணீர் என மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் இறந்த வாத்துக்குஞ்சுகளின் பிரேதங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சுதாகரன் கூறுகையில், வாத்துக்குஞ்சுகள் அனைத்தும் 38 நாள் ஆனவை. ஒரு வாத்துக்குஞ்சு முழுமையான வளர்ச்சி பெற 100 நாட்களாகும். ஒரு குஞ்சு ரூ.100 என மொத்தம் ரூ.7 லட்சம் வங்கிக்கடன் பெற்று 7 ஆயிரம் குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்து வந்தேன். இன்று என் கண்ணெதிரிலேயே எல்லா வாத்துக்குஞ்சுகளும் இறந்து போனது. இது எனக்கு பெரிய இழப்பாகும். அரசு ஏதாவது எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறினார்.

இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாத்துக்களை கால்நடையாகவே மேய்த்து வரும்போது வயல்வெளிகளில் எலிகளுக்காக வீரியம்மிக்க விஷம் வைப்பார்கள். அதை கால்நடைகள் முகரும்போது இதுபோன்ற பிரச்னை வரும். அதேநேரத்தில் பாலாற்றில் தேங்கிய நீரின் அடர்த்தி காரணமாக இருக்கலாம். அல்லது பல நாட்கள் தண்ணீர் தேங்கியிருப்பதாலும் சுற்றுச்சூழல் பாதிப்பால் விஷம்போல் மாறியிருக்கலாம். இறப்புக்கு என்ன காரணம் என்பது முழுமையான ஆய்வுக்கு பிறகே தெரியும். சம்பவ இடத்துக்கு எங்கள் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தண்ணீர் மாதிரி ஆய்வு வந்த பிறகுதான் முழுமையான தகவல் தெரியுது. ஆனால் நிச்சயம் இது பறவைக்காய்ச்சலாக இருக்காது என்றார்.

பாலாற்றில் ஒரே சமயத்தில் 6 ஆயிரம் வாத்துக்குள் திடீரென சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படி சிஎம்சி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவமனை கழிவுநீர் விஷமாக மாறி பாலாற்றில் கருப்பு நிறத்தில் தேங்கி நிற்கின்றன. தெற்கு ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனை என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் மருத்துவமனைக்கு தனது மருத்துவமனை கழிவுநீரை வெளியேற்ற வேறு வழியை தேடாமல் இப்படி பாலாற்றை பாழாக்கி வருவது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இப்படி அநியாயமாக ஏழை விவசாயியின் கனவு தகர்ந்து போகும் அளவுக்கு இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்று இரண்டல்ல 6 ஆயிரம் வாத்து குஞ்சுகள் ஒரே நேரத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றில் பலவித கோளாறுகள் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். பாலாற்றை பாதுகாக்க யாரும் இல்லை என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 சிஎம்சி நிர்வாகத்தை யாரும் தட்டிக் கேட்பது இல்லை. வேலூர் மாநகராட்சி நிர்வாகமோ வெண்சாமரம் வீசுகிறது சிஎம்சி நிர்வாகத்துக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுயநலம் அதிகரித்து விட்டதுதான் இதற்கு அடிப்படை காரணம் ஆகும். பொதுநலம் இருந்தால் பாலாற்றை இப்படி சீரழிக்க மாநகராட்சி நிர்வாகம் விட்டிருக்காது. யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது நமக்கென்ன என்ற ரீதியில் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதுதான் இதற்கு முழுமையான காரணமாகும். மாவட்ட நிர்வாகமும் இயற்கை வளங்கள் மீது தனது பார்வை விழும்படி பணியாற்ற வேண்டும். இதில் நமக்கென்ன வேலை என்று கண்டும் காணாமல் செல்வது அழகல்ல, பொறுப்பல்ல, இது பொறுப்பு துறப்பு நடவடிக்கையே ஆகும்.  என்றைக்கு நாட்டின் இயற்கை வளம் சீரழிவதை பார்த்து கொண்டு அரசு இயந்திரங்கள் செயல்படத் தொடங்கினவோ அன்றைக்கே நாடு அழிவுப் பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது என்று அடித்து கூறலாம். இப்படி 6 ஆயிரம் வாத்து குஞ்சுகளை ஒரே நேரத்தில் இழந்த விவசாயிக்கு யார் இழப்பீடு தருவார்கள். அரசு கருணை உள்ளத்தோடு இந்த பிரச்னையில் பரிசீலனை செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிக்கு இழப்பீடு கொடுத்து மீண்டும் வாத்து குஞ்சுகள் வளர்க்க சுதாகரனுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments