Breaking News

4 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

புதுச்சேரி, பிப்.26-

விழுப்புரம்& நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகள் உட்பட   புதுச்சேரியில் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், சுகாதாரம் மற்றும் விளையாட்டு  தொடர்பான பல மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பல திட்டங்களை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணியளவில் பிரதமர் சென்னை வந்தார். பின்னர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரதமரை வரவேற்றார்... மேலும் மத்திய மந்திரி, பா.ஜனதா கட்சியினர், கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். 

பின்னர் கார் மூலம் ஜிப்மர் கலையரங்கத்துக்கு பிரதமர் வந்தார். அவரை ஜிப்மர் இயக்குனர், அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு நடந்த அரசு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், செல்வ ராஜ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

அங்கு காணொலி காட்சி வழியாக விழுப்புரம்& நாகப்பட்டினம் இடையில் ரூ. 2,426 கோடி  மதிப்பில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. என்.எச். 45&ஏ என்ற தேசிய நெடுஞ்சாலைப் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.



ஜிப்மர், காரைக்கால் வளாகத்தில் ரூ. 491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

புதுவை துறைமுகத்தில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டினார்.  

உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டுத் திடலில் ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

புதிய கட்டிடங்கள் திறப்பு

ஜிப்மர் மருத்துவமனையில் ரூ. 28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம்,

மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால் லாசுப்பேட்டையில் ரூ. 11.85 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி,

புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ. 14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டடம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடி ரூ.3 ஆயிரத்து 23 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்து பேசினார். 

புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அவர் பேசியதாவது, நாடு முழுவதும் உள்ள வேளாண் மக்களுக்கு 4 வழிச்சாலை பயனளிக்கிறது. விழுப்புரம்&நாகை 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். 4 வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ஆலயத்திற்கு எளிதாக செல்லலாம். 4 வழிச்சாலையால் அப்பகுதியில் தொழில்கள் அதிகரித்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.  புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான நமது நோக்கத்தின் ஒரு பகுதியாக, நான் ஜிப்மரில் ரத்த சேமிப்பு மையத்தை திறந்து வைத்துள்ளேன்.   இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பிரதமர் மோடி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்துக்கு வந்து உரையாற்றினார்.   பின்னர் பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து கோவை புறப்பட்டார்.

பிரதமர் வருகையை யொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் காரில் செல்லும் சாலையில் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பாதுகாப்பு பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதிவிரைவு படையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை ராணுவ படையினர் 200 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.





நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் அறிவிப்பால் பள்ளிகளுக்கு மாணவ&மாணவிகள் வந்து செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் நேற்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டது.

No comments

Thank you for your comments