229 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
வாசிம், பிப்.26-
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஒரு குடியிருப்பு பள்ளியின் விடுதியில் வசிக்கும் 229 மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் உட்பட 4 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 21,21,119 ஆக உள்ளது.
மேலும் புதன்கிழமை 80 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 51,937 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த வாரம் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாஷிம் மாவட்டத்தின் ரிசோட் தாலுகாவில் உள்ள டெகானில் உள்ள குடியிருப்பு பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 21 மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு தங்கி படிக்கும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மொத்தம் 229 மாணவர்கள், நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி, ஹிங்கோலி, நந்தேடு, வாஷிம், புல்தானா, அகோலாவைச் சேர்ந்த மொத்தம் 327 மாணவர்கள் இந்த விடுதியில் வசிக்கின்றனர். தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் சண்முகராஜன் அந்த பள்ளிக்கு வருகை தந்து நிலைமையை ஆய்வு செய்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி அமைந்துள்ள பகுதி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments