30 அடி ஆழமுள்ள கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து-42 பயணிகள் உயிரிழப்பு
போபால், பிப்.16-
மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 42 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கிய மேலும் பலரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்ப்படுகிறது. மீட்பு பணி நடந்து வருகிறது. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் இருந்து சத்னா என்ற இடத்துக்கு 54 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ராம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷார்தா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.
இன்று காலை 8.30 மணி அளவில் இந்த கோர விபத்து நடந்தது. கால்வாயில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பி இருந்ததால் அந்த பஸ் முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது. பஸ்ஸில் இருந்த 54 பயணிகளும் நீருக்குள் மூழ்கினர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்றனர். மாநில பேரிடர் மட்டப்பு படையினரும், நீச்சல் வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பஸ் கால்வாயின் தரைப்பகுதி வரை மூழ்கியதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
7 பேர் கால்வாயில் நீந்தியபடி கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டனர். தொடர் மீட்பு பணியில் பஸ்ஸில் இருந்து 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நீரில் மூழ்கிய மேலும் 5 பேரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்ப்படுகிறது. பேருந்து தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகே வெளியே எடுக்க முடிந்தது.
மீட்பு பணிக்காக அந்த கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. கால்வாயில் வேகமாக தண்ணீர் செல்வதால் பன்சாகர் மற்றும் ஷிஹவால் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டு இருக்கிறது.
மீட்பு படையினர் ரப்பர் படகில் சென்று மாயமானவர்களை தேடி வருகிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11 மணியவில் மத்திய பிரதேசத்தில் இரு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் இந்த விபத்து ஏற்பட்டவுடன் அமித் ஷா கலந்து கொள்ள இருந்த விழா ரத்து செய்யப்பட்ட்டது. பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 35 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்குள்ளான பஸ் தினமும் செல்லும் பகுதியில் நெரிசல் இருந்ததால் டிரைவர் மாற்று பாதையாக கால்வாய் மேம்பாலத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
நிவாரணம் அறிவிப்பு
பேருந்து விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பேருந்து விபத்து தொடர்பாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மாவட்ட ஆட்சியருடன் உரையாடினார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments