பிப்.23ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு
சென்னை, பிப்.16-
2021-2022ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
2021ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் இம்முறை தமிழ்நாடு அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறது. அந்த வகையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல் ஓ.பி.எஸ். தாக்கல் செய்கிறார்.
இதற்காக 23ம் தேதி மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் குறிப்பாக மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது குறித்து தலைமைச் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 23.2.2021ம் நாள், செவ்வாய்க்கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு சென்னை-600 002, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் பேரவைத் தலைவர் தனபால் கூட்டியுள்ளார்
மேலும் 23.2.2021ம் நாள், செவ்வாய்க்கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு 2021-2022ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப் பெறும் என சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments