தேர்தலில் குறித்து ஹெல்ப் லைன் புகார் எண் 1950 அறிவிப்பு
சென்னை :
தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து 1950 என்ற ஹெல்ப் லைனுக்கு புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூர் அளித்த பேட்டி விவரம்:
துணை ராணுவத்தினர் தொடர்ந்து வந்துகொண்டிருக் கிறார்கள்.இவர்கள் மாநில காவல்துறையுடன் இணைந்து மாவட்டங்களுக்கு சென்று சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள். தொடர்ந்து அவ்வப்போது துணை ராணுவத்தினர் வருகை குறித்து தேர்தல் ஆணையம் தகவல் அளிக்கும். 80 சதவீத அளவிற்கு வாக்கு சாவடிகள் தயார் நிலையில் உள்ளது ஒரு சில இடங்களில் இன்று ( நேற்று) கூட்டத்தை நடத்தி மீதம் உள்ள இடங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று தகவல் அளிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் உடனடியாக பறக்கும் படையை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள். மத்திய, மாநில அரசு இணைந்து பண பட்டுவாடா தொடர்பாக செயல்படுவோம். இதை தவிர 1950 என்ற எண்ணிற்கு பண பட்டுவாடா தொடர்பாக யாராவது புகார் அளித்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 45 கம்பெனி துணை ராணுவப்படை முதல் கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருவார்கள்.
தேர்தல் செலவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம். வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.பணப்பரிமாற்றம் குறித்து விரிவாக ஆய்வு நடத்தி கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். மிகப்பெரிய பண பரிமாற்றம் அதுபோல இதுவரை பயன்படுத்தாத வங்கி கணக்குக்கு பணம் சென்றால் அது குறித்து ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளோம். வாக்குபெட்டிகள் எடுத்துசெல்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளது. இதனை கவனத்துடன் கையாள உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின் போது ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப்பணம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.அது தற்போதும் தொடரும். அதே நேரத்தில் உரிய ஆவணங்களுடன் கூடுதல் பணத்தை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். அவ்வப்போது தேர்தல் ஆணையம் வழங்கும் உத்தரவுகளை தொடர்ந்து செயல்படுத்துவோம்.கொரோனா விதிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும். வாக்காளர்கள் கையில் சானிடைசர் வைத்து துடைத்துகொண்ட பின்னர்தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments