Breaking News

டிகேஎம் மகளிர் கல்லூரி சாலையில் உருவாகியுள்ள பாதாள சாக்கடை மெகா சைஸ் பள்ளம் மூடப்படுமா?

வேலூர், ஆக.14-

வேலூர் சாய்நாதபுரம் டிகேஎம் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையில் உருவாகியுள்ள பாதாள சாக்கடை மெகா சைஸ் பள்ளம் மூடப்படுமா? அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகு மூடப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேலூர் சாய்நாதபுரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி டிகேஎம் மகளிர் கல்லூரி செல்லும் வரையில் ஒரே சாலை செல்கிறது. இந்த சாலையை நடுவில் பிளந்து பாதாள சாக்கடை அமைத்துள்ளது வேலூர் மாநகராட்சி நிர்வாகம். பணி முடிந்த பிறகு அந்த பள்ளத்தை சிமெண்ட் கொண்டு நிரப்பிச் சென்றுள்ளனர். இதில் ஒரு இடத்தில் மெகா சைஸ் பள்ளம் சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல லாயக்கற்ற சாலையாக இந்த சாலை உருமாறியுள்ளது. 

இது தினமும் இந்த சாலை வழியாக பயணிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் தொலைவில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை பொறுப்பாளரும், மாநகராட்சி உதவி செயற்பொறியாளருமான சீனுவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஓரிரு நாளில் சரி செய்து தருவதாக கூறிவிட்டு எந்த பணியையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காண்பித்து வருகிறார் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சீனுவாசன். இவர் என்ன மக்களுக்கு பணியாற்ற வந்தவரா? ஒப்பந்ததாரர் கூறுவதற்கு தலையாட்டும் பொம்மையாக இருப்பதற்கு வந்தவரா? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. 

இந்நிலையில் இவருக்கும், மாநகராட்சி ஆணையர் சங்கரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது... இது மேலும் வசதியாக போய்விட்டது. பள்ளம் மூடப்படுமா? அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட பின்னர் பள்ளம் மூடப்படுமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்...

பொதுமக்கள் பணியில் சுணக்கம் காண்பித்தால் விபரீதம் ஏற்படுவது மட்டுமல்ல பிரச்னையில் சிக்கி நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என்றால் டெண்டர் கேன்சல் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால், இதுபோன்று ஒப்பந்ததாரர்கள் செயல்படமாட்டார்கள் என்றும், அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு உடந்தையாக இருப்பதால்தான் ஆங்காங்கே ஸ்மார்ட் சிட்டி பணி கோவிந்தா கோவிந்தா என்று இருக்கின்றது. இது ஒன்றே சிறந்த உதாரணமாக உள்ளது. மக்கள்  வரிப்பணத்தை ஊதியமாக பெற்று பணியாற்றும்போதே மக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகளுக்கு கசக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 மாநகராட்சி ஆணையர் சங்கரன் இந்த பள்ளத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அடைக்க,  இந்த பணியை எடுத்துள்ள ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மாநகராட்சி ஆணையர் சங்கரனின் நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இல்லை சங்கரா சங்கரா என்று போய்விடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்...

No comments

Thank you for your comments