சாம்சங் போன் ஆர்டர் செய்தவருக்கு நிர்மா சோப்பு: ப்ளிப்கார்ட் மீது மோசடி வழக்கு
மும்பை, ஜூன் 9-
மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள வால்கேஸ்வரை சேர்ந்தவர் ஆனந்த்
பாலாகியா. முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் ஆன்லைன் வர்த்தக
நிறுவனமான ப்ளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி நோட் 4 செல்போனுக்கு கடந்த
மாதம் 25ம் தேதி ஆர்டர் கொடுத்துள்ளார்.
கடந்த 30ம் தேதி அவருக்கு ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வந்த
பார்சலை பிரித்துப் பார்த்தால் அதில் போனுக்கு பதில் நிர்மா சோப்பு
இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
செல்போனை டெலிவரி கொடுக்க வந்த நபரிடம் ரூ. 29 ஆயிரத்து 900 கொடுத்தேன்.
பணத்தை வாங்கிவிட்டு அவர் சென்ற பிறகு அட்டைப்பெட்டியை பிரித்துப்
பார்த்தபோது அதில் ஒரு சோப்பும், ஆன்டிராய்ட் போன் சார்ஜரும் இருந்தது.
உடனே அந்த டெலிவரி பையனை போனில் அழைத்தபோது அவரோ இது குறித்து கஸ்டமர்
கேர் எண்ணுக்கு போன் செய்யுங்கள் என்றார். கஸ்டமர் கேருக்கு போன் செய்தால்
இந்த புகார் உண்மை இல்லை என்றார்கள்.
அதன் பிறகே மலபார் ஹில் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
எனது புகாரின்பேரில் போலீசார் ப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மோசடி
வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்போனுக்கு பதில் நிர்மா சோப்பு அளித்த
ப்ளிப்கார்ட்டை நினைத்தால் எரிச்சலாக உள்ளது என்றார்.
இந்நிலையில் இது குறித்து ப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியருப்பதாவது,
வாடிக்கையாளர்களை எங்கள் நிறுவனம் ஒருபோதும் மோசடி செய்யாது. இந்த சம்பவம்
குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வாடிக்கையாளருக்கு
பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments