Breaking News

ஐ.பி.எல். தொடர்: டக்வொர்த் லூயிஸ் முறையில் புனே வெற்றி

மும்பை, ஏப்.27-
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புனே வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து ஐதராபாத்தின் டேவிட் வார்னர்,
தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய வார்னர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையின் தவான் பொறுப்புடன் ஓட்டங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் மற்ற வீரர்கள் புனேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர்.

இறுதிகட்டத்தில் புவனேஷ்குமார் சிறிது அதிரடி காட்டினார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐதராபாத் 118 ஓட்டங்களை எடுத்திருந்தது. தவான் 1 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 56 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். புனே தரப்பில் அசோக் திண்டா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே களமிறங்கியது. ரகானே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் பின்னர் இணைந்த டூபிளசிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி துரிதமாக ஓட்டங்களை குவிக்கும் முயற்சியில் இறங்கின.

இந்நிலையில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி உட்பட 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டூபிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டோனியும் 5 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஆட்டத்தின் 11வது ஓவரின் போது 3 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே ஜெயித்தாக அறிவிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments