Breaking News

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: இடைக்கால மனுக்களை வாபஸ் பெற்றது தமிழக அரசு

டெல்லி, ஏப்.14-
முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்றும், 2014 ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி கேரள அரசு நிறைவேற்றிய முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக 3 இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தது.

அந்த மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி "இந்த அனைத்து இடைக்கால மனுக்களிலும் பதில் மனுக்கள் மற்றும் எதிர்ப்பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஏற்கனவே 2014 ல் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், அப்போதைய உத்தரவில் அணையை தொடர்ந்து கண்காணிப்பதற்கு 3 நிபுணர்கள் கொண்ட குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. எனவே தமிழக அரசு தொடர்ச்சியாக இப்படி இடைக்கால மனுக்களை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி "அணைப்பகுதிக்கு மராமத்து பணிகளுக்காக தமிழக அரசு அதிகாரிகள் எளிதாக சென்று வருவதற்கு கேரள அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், அணைப்பகுதிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மிகவும் அவசியம். தமிழக அதிகாரிகள் மராமத்து பணிகளுக்காக அணைப்பகுதிக்கு தடையின்றி வந்து செல்வதற்கு உரிய அனுமதி வழங்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "முல்லை பெரியாறு குறித்த மூல வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வெவ்வேறு காரணங்களுக்காக இது போன்று இடைக்கால மனுக்களை தாக்கல் செய்வதை அனுமதிக்க முடியாது.

வேண்டும் என்றால் தமிழக அரசு இது குறித்து சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரளா அரசு செயல்படுத்த மறுத்தால் அது குறித்து மனு தாக்கல் செய்யலாம்.

இந்த இடைக்கால மனுக்களை திரும்ப பெற்றுக் கெள்ளுங்கள். இல்லையென்றால் தள்ளுபடி செய்யப்படும்" என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் படை பாதுகாப்பு கோரும் மனுவையும், முல்லைப்பெரியாறு பகுதிக்கு தமிழக அதிகாரிகள் சென்றுவர கேரளா அனுமதிக்க வேண்டும் என்றும் வள்ளக்கடவு பகுதிக்கு சாலை அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த 2 மனுக்களையும் தமிழக அரசு திரும்ப பெற்றது.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு ஆய்வு நடத்த மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்காததால் அது தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவையும் நீதிபதிகள் முடித்து வைப்பதாக கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments