பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! புயலை கிளப்ப காங். திட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே, நாடாளுமன்றத்தின்
பட்ஜெட் கூட்டத்தொடர் (2வது கட்ட தொடர்) இன்று கூடுகிறது. உத்தராகண்ட்
மாநில விவகாரம் உள்ளிட்டவை பற்றி புயலை கிளப்ப காங்கிரஸ் கட்சி
திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி
மாதம் 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடந்தது. இந்த தொடரின் போது
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது சம்பவம், விஜய் மல்லையா கடன் மோசடி,
அருணாச்சல பிரதேச அரசியல் விவகாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
எழுப்பி கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
இதனால் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும், பாராளுமன்ற தொடர்
பெரும்பாலும் சுமுகமாக நடந்தது. இதனால் இரு அவைகளிலும் குறிப்பிட்ட சில
மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம்
13ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா,
சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை திருத்த மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில்
திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதுடன், 2 அவசர
சட்டங்களுக்கும் மத்திய அரசு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரத்தை
நாடாளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க
காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த
காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
உத்தராகண்ட் விவகாரம் மீது தொடரின் முதல் நாளான இன்றைக்கே விவாதம்
நடத்துவதற்காக ராஜ்யசபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ்
நோட்டீசு அளித்துள்ளது. இதற்கு இடதுசாரிகள், ஐக்கிய ஜனதாதளம் போன்ற
எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இதுதவிர வறட்சி மேலாண்மை, இஸ்ரத் ஜகான் வழக்கு, பதன்கோட் தீவிரவாத
தாக்குதல், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் உள்ளிட்ட பல்வேறு
பிரச்சினைகளையும் பாராளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
No comments
Thank you for your comments