Breaking News

தமிழ்நாட்டில் மம்தாவை போல உறுதியோடு பா.ஜனதா கட்சியை நடத்துவோம்: மத்திய மந்திரி ஜவ்டேகர் பேட்டி

சென்னை, மார்ச். 29–

மத்திய மந்திரியும், தமிழக பாரதீய ஜனதா மேலிட தலைவருமான பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் நீண்ட காலம் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியை பொறுத்த வரை தமிழ்நாட்டில் எங்களுடைய தனிப் பாணியில் தொடர்ந்து கட்சியை நடத்தி வருவோம்.


மேற்கு வங்காளத்தில் 30 வருடங்களாக காங்கிரஸ் ஆட்சி இருந்து வந்தது. அடுத்து 30 வருடங்கள் கம்யூனிஸ்டு ஆட்சியில் இருந்தது. அவர்களை மம்தா பானர்ஜி தனது சொந்த பாணியில் பிரச்சினைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து எதிர்த்து போராடினார். இதன் காரணமாக அவர் ஆட்சியை பிடித்தார்.

அதே போல தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியும் செயல்படும். முழுமையான மம்தாவைப் போல இல்லாவிட்டாலும் அவரைப் போலவே எங்கள் பாணியில் நாங்கள் செயல்படுவோம்.

தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா ஒரு தடவை சட்டசபை தேர்தலிலும், ஒரு தடவை பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். 

சட்டமன்ற தமிழக தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில் 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் உரிய தீர்வு எட்ட முடியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தியது. 

தே.மு.தி.க. விஜயகாந்தை முன்நிறுத்தியது. நாங்கள் இப்போது இந்திய மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, லோக் ஜனசக்தி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். சுப்பிரமணியசாமி ஏற்கனவே ஜனதா கட்சியை நடத்தி வந்த போது, அதில் இருந்த முக்கியமான தலைவர்களுக்கும் டிக்கெட் வழங்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை இப்போது சொல்ல முடியாது. நீண்ட கால தேர்தல் பணிகள் உள்ளன. நிச்சயமாக பாரதீய ஜனதா கட்சிக்கு மக்களிடம் நல்லாதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments