ஜம்மு-காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அமைச்சரவை : ஏப்ரல் முதல்வாரத்தில் பதவியேற்கும் என மெஹ்பூபா அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீர், மார்ச் 27-
ஜம்மு-காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அமைச்சரவை ஏப்ரல் முதல் வாரத்தில் பதவியேற்கும் என, முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள மெஹ்பூபா அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் நடத்திய கூட்டணி ஆட்சியில் முதலமைச்சராக இருந்த திரு. முஃப்தி முகமது சயீத், கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி மரணம் அடைந்தார். அதனையடுத்து, அவரது மகள் திருமதி மெஹ்பூபா முஃப்தி முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு, சில உத்தரவாதங்களை எழுத்துபூர்வமாக வழங்கினால் மட்டுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என திருமதி மெஹ்பூபா உறுதிபட தெரிவித்தார். அதற்கு பாரதிய ஜனதா மறுத்ததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, பிரச்சனைக்குத் தீர்வுகாண, திருமதி மெஹ்பூபா டெல்லி சென்று பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித்ஷா, நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி, பிரதமர் திரு. நரேந்திர மோதி ஆகியோரை சந்தித்துப் பேசியதன் விளைவாக சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருமதி மெஹ்பூபாவும், கூட்டணிக் கட்சியான, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு. நிர்மல்சிங்கும், ஆளுநர் திரு. N.N.Vohra-வை நேற்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், பதவியேற்பு தேதியை விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த திருமதி. மெஹ்பூபா, தங்களது கூட்டணி அமைச்சரவை ஏப்ரல் முதல் வாரத்தில் பதவியேற்கும் என, தெரிவித்தார்.
No comments
Thank you for your comments